விமர்சனம்: யாமினி பிரியா சுந்தரம்
தொடர் வெற்றிக்கும் நீடித்த மகிழ்ச்சிக்குமான சாவி நம்மிடமே இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக உள்ள இந்தப் புத்தகம் ஒன்பது தலைப்புகளை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது.
மனம் என்பது ஒரு மந்திரச்சாவி. அதைக் கொண்டு எதையும் திறக்கலாம் .ஆனால் அந்தச் சாவி சரியாக பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டு துருப்பிடித்துக் கிடைக்கிறது என்றால் அதைத் தியானத்தின் மூலம் சரி செய்யலாம். தியானம் செய்தால் மனம் நிதானம் அடையும், தெளிவடையும் ,மனம் தெளிவாக இருந்தால் ஒரு பிரச்சனை தொடர்பாக அதுவரை புலப்படாத தீர்வுகள் எல்லாம் புலப்பட ஆரம்பிக்கும்.
உடல் என்பது கண்ணுக்குத் தெரிகின்ற மனம். மனம் என்பது கண்ணுக்குத் தெரியாத உடல். மனதை மாற்றிக் கொண்டால் உடலும் மாறும், வாழ்க்கையும் மாறும். உலகத்தையே நாம் மாற்றலாம். தியானங்கள் செய்தும் மனதைப் பண்படுத்தலாம்.
பெரியவர்கள் எப்படிப் பிரச்னையை அணுகிறார்கள் என்று கவனித்தும் மனதைப் பண்படுத்தலாம். உணர்ச்சிவசப்படாத, எதிர்மறை உணர்ச்சிகளின் பிடியில் சிக்காத மனம்தான் வெற்றி மனம். அதுதான் தியான மனம். அதுதான் தங்கச்சுரங்கத்தின் சாவி.
சாதனைகள் எதுவும் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களைப் போன்றது அல்ல. பொறுமையும் வெற்றியும் இணை பிரியாத நண்பர்களாக இருக்கிறார்கள். பொறுமை, காத்திருப்பு என்பதும் வாழ்வின் முக்கிய அம்சங்களாக இருக்கிறது .பொறுமை என்பது கஷ்டம் வரும்போது மட்டும் வெளிப்படுத்தப்படுவது அல்ல. ரொம்ப சந்தோஷமாக இருக்கும்போதும், நிறைய அறிவு இருக்கும்போதும், நிறையப் பணம் இருக்கும் போதும் எனப் பல தளங்களிலும் பல பரிமாணங்களிலும் பொறுமையையும் பொறுமை இன்மையையும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. கஷ்டத்தில், நோயில், வறுமையில் ,பொறுமை இல்லை என்றால் அப்பிரச்சினைகள் அதிகரிக்கும். செல்வத்தில், செல்வாக்கில் ,அறிவில் இம்மாதிரியான விஷயங்களில் பொறுமை இல்லை என்றால் அவையெல்லாம் நம்மை விட்டு நீங்க ஆரம்பிக்கும். பொறுமையின் இன்னொரு அர்த்தம் விடாமுயற்சி. பொறுமையாக இருப்பது முழுக்க முழுக்க மனம் சார்ந்த விஷயம். பிரார்த்தனைகளைவிட மிகவும் உயர்ந்தது. பொறுமையாக இருப்பது எளிதான காரியம் அல்ல. அதற்கு நிறையப் பயிற்சியும் முயற்சியும் தேவைப்படுகிறது.
பிரச்னைகள் இரண்டு விதமாகப் பார்க்கப்படுகின்றன. ஒன்று, உடல் மட்டும் சார்ந்த பிரச்னைகள், இன்னொன்று மனம் சார்ந்த பிரச்னைகள். மனம் சார்ந்த பிரச்னைகள் உடலையும் பாதிக்கும். ஒரு மனிதனை வாழ வைப்பதும், சாகடிப்பதும் அவனது மனமாகவே இருக்கிறது. மனமே வெல்லும் ,மனமே கொல்லும் .மனமானது ஒரு மாயக்குப்பைத் தொட்டி, 24 மணி நேரமும் அதிலிருந்து எண்ணங்கள் வந்து கொண்டே இருக்கின்றன .மனதைப் பொருத்தவரை இரண்டு சாத்திய கூறுகள் உண்டு,
ஒன்று நாம் சிந்திக்கின்றோம் இரண்டு நம் மனதில் இருந்து எண்ணங்கள் வந்து விழுந்துகொண்டே இருக்கின்றன .
கவலை, குழப்பம் கோபம், காமம், அச்சம் எரிச்சல், பொறாமை இப்படிப்பட்ட எதிர்மறையான எண்ணங்கள்தான் நம் மனக்குப்பை தொட்டிக்குள் வந்து விழுந்து கொண்டே இருக்கின்றன. கொஞ்ச நேரத்தில் அவை நூறாக, ஆயிரமாக, லட்சமாக கூடிக் கொண்டே போகின்றன. இப்பகுதியில் மாரிஸ் குட்மேன் என்ற அமெரிக்கருக்கு அவர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை விவரிக்கின்றார் ஆசிரியர். அவர் எப்படி ஒரு அதிசய மனிதரானார் என்று விரிவாக விளக்குகிறார். எப்படி தனது மனதின் எண்ணங்களின் மூலம் கடுமையான விபத்திலிருந்து நல்ல நிலைக்கு மாறினார் என்பதை விளக்கும்போது மனித மனம் ஒரு மாயக் குப்பைத்தொட்டி மட்டுமல்ல, அது ஒரு அற்புத பொக்கிஷ பெட்டியும் கூட என உணர முடிகிறது.
ஒரு பிரச்னைக்கு தீர்வு காணப் புதிய கோணத்தில் சிந்திக்க வேண்டும். மாற்றி யோசிக்க வேண்டும். அதற்கு மனம் அமைதியாக இருக்க வேண்டும். பிரச்னை என்றால், வாழ்க்கையில் எந்த விஷயத்திலும் வெற்றி வேண்டுமென்றால் மனதில் அமைதி இருந்தால் மட்டுமே அது சாத்தியம் என்று நிறைய உதாரணங்களை கொண்டு விளக்குகிறார்.
ஒரு மனிதனின் கோபம் இன்னொரு மனிதனைக் காயப்படுத்துகிறது. இதயத்துடிப்பின் அளவு அதிகமாகிறது, ரத்த அழுத்தம் கூடுகிறது, அல்லது குறைகிறது அட்ரினல் போன்ற ஹார்மோன்கள் தேவையற்ற வேளையில் மிக அதிகமாகச் சுரக்கின்றன. மூளை பாதிக்கப்படும். கோபம் எதிரிகளைதான் உருவாக்கும், ஆனால் அன்பும் கருணையும் எதிரிகளையும் நண்பர்களாக்கிவிடும் என்று ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கை சம்பவத்தைக் கூறி அழகாக விளக்குகிறார். கோபம் என்பது நமக்கு அடிமையாக இருக்க வேண்டுமே தவிர, நாம் கோபத்திற்கும் அடிமையாகக் கூடாது. கோபத்தில் இரண்டு வகை உள்ளது. ஒன்று நம்மையே அழிக்கும் கோபம், இன்னொன்று தார்மீகமான கோபம். இரண்டாம் வகை கோபம் என்பது அநியாயத்தையும் அக்கிரமங்களையும் கண்டு பொங்கி எழுவது. தார்மீகமான கோபம் நம்மை அழிக்காது. அந்தத் தார்மீக கோபம் ஆனது மனிதனுக்கு இருக்க வேண்டும். அதனை வெளிப்படுத்தவும் வேண்டும். அது உணர்ச்சிக்கு அடிமையாகாதது. அது நெருப்பு அல்ல, சுடும் வெய்யிலை போல. இந்தப் பகுதியில் கோபத்தை எவ்வாறெல்லாம் நம் கட்டுப்படுத்த முடியும் என ஆசிரியர் சில வலழிகளையும் எடுத்துரைக்கிறார்.
வெற்றி பெற வேண்டும் எனில் முதலில் நீங்கள் 100% பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் .எந்த தோல்விக்கும், ஏமாற்றத்துக்கும் அடுத்தவர் மீது பழி போடக்கூடாது. நாம் இன்று இப்படி இருப்பதற்கு காரணம் நேற்றைய நமது எண்ணங்கள், அதாவது நமக்கான இன்றைய நாம்தான் நமது கடந்த கால எதிர்வினைகளின் மூலம் உருவாக்கியிருக்கிறோம் .அப்படியானால் நமக்கான நாளைய நாம் இன்று உருவாக்க முடியும். நம் எண்ணங்களை, எண்ணும் முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். நாம் அனைவரும் இந்த உலகுக்கு ஒரு காரண காரியத்துடனே வந்துள்ளோம். அந்த காரண காரியத்தை உணர்ந்து, நமது உள்ளுணர்வை நம்ப வேண்டும் .நமது வாழ்வின் நோக்கம் நமக்கு தெரிந்து விட்டால் அது நம் ஆழ் மனதில் பதிந்து, நமது வாழ்க்கையை மெல்ல மெல்ல நோக்கத்தை நோக்கி செலுத்தும். ஒத்த விஷயங்கள் ,ஒத்த விஷயங்களை தன்னோக்கி இழுக்கும். நல்லது நல்லதையும், கெட்டது கெட்டதையும் இழுக்கும் .வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு .பலர் நோய் என்ற விளையாட்டை விளையாடுகிறார்கள். பலருக்கு வறுமை விளையாட்டு ,செல்வம் என்ற விளையாட்டை ஆரோக்கியம் என்ற விளையாட்டை வெற்றி என்ற விளையாட்டு சந்தோஷ விளையாட்டை விளையாடத் தெரிந்தவர்கள் வெகு சிலரே. ஒரு துளி கடல் நீரில் கடலின் அத்தனை குணங்களும் இருப்பது போல உங்களுக்குள்ளும் எல்லாம் இருக்கிறது. அதை உணர்ந்து கொள்ள தியானங்கள் நிச்சயம் உதவும்.
நம்மை நாம் முற்றிலுமாக நேசித்து பழக வேண்டும் அதேபோல் மற்றவர்களை வெறுப்பதும் நம்மை நாம் வெறுப்பதும் ஒன்றுதான் நாம் அடுத்தவரை வெறுத்தால் நமக்குள் உள்ள கோடிக்கணக்கான செல்களில் நம்மை வெறுக்க ஆரம்பிக்கின்றன என்கிறது இன்றைய விஞ்ஞானம்.
அக மாற்றம் தான் எல்லா புறம் மாற்றங்களையும் கொண்டு வரும்.
இறுதியாக தியானத்தின் நன்மைகளை விரிவாக எடுத்துரைக்கிறார். அதேபோல் இறுதி பகுதியில் பல தியான முறைகளையும் ,அது எவ்வாறு செய்ய வேண்டும், அதன் பலன்களையும் விரிவாக எடுத்துரைக்கிறார். இப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பகுதியும் நாம் நமது வாழ்வை சிறப்பானதாக மாற்றிக்கொள்ள உறுதுணையாக இருக்கும் மாற்று சாவிகள். இந்த மாற்று சாவிகளை பயன்படுத்தி, ஒருவர் நிச்சயம் உயர்ந்த இலக்குகளை அடைய முடியும்.
0
மாற்றுச்சாவி
நாகூர் ரூமி
நூலைப் பெற: Dial for Books