இந்தியாவை மிரள வைத்த கொள்ளைக்கூட்டத்தின் கதை

Blogs / Reviews / இந்தியாவை மிரள வைத்த கொள்ளைக்கூட்டத்தின் கதை

விமர்சனம்: ராஜா ஹாசன்

1800 களில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்தபோது அவர்களையே மிரள வைத்த ஒரு கொள்ளைக் கூட்டம் உண்டு என்றால் அது ’தக்’ என அழைக்கப்படும் தக்கர் கொள்ளையர்கள்.

வரலாற்று ஆர்வலரான இந்நூல் ஆசிரியர் இரா.வரதராசன், வரலாறு தொடர்பான மிகப் பழமையான ஆவணங்களை தேடித் தேடி நாடு முழுவதும் பயணம் செய்திருக்கிறார். அவரிடம் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய வரலாற்று நூல்களில் இருந்து தகவல்களை இந்த நூலில் நமக்குத் தருகிறார்.

18- 19 நூற்றாண்டுகளில் ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு வியாபாரத்துக்கு புறப்பட்டு சென்ற வணிகர்கள், புனித யாத்திரை சென்றவர்கள், ஆயிரக்கணக்கில் காணாமல் போகிறார்கள். அரசாங்கத்தின் பணப்பெட்டிகளைச் சுமந்து சென்ற கூலியாட்களுடன் ராணுவ வீரர்களும் அநேகம் பேர் மாயமாய் மறைந்தனர். அவர்களை போலீஸ்சாரால் கூட  கண்டுபிடிக்க முடியவில்லை.

தக்கர்கள் என்பவர்கள் யார் என்ற கேள்விக்கு மிகச் சரியான பதில், அவர்கள் மிகக் கொடூரமான வஞ்சக நெஞ்சம் கொண்ட கொலைகாரர்கள் என்பதுதான்.

கொலை செய்வதற்காகவே கூட்டம் கூட்டமாக இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 800 ஆண்டுகளாக அலைந்து வந்த ரகசிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.

கொஞ்சம்கூட ஈவு இரக்கம் தர்ம நியாயம் இன்றி சக மனிதர்களைத் தங்களின் சுயலாபத்துக்காக கொன்று குவிக்கும் இந்தக் கொடியவர்களை வேரோடு அழிக்க வேண்டும் என முடிவெடுத்து அதை செயல்படுத்தியவர் ஓர் ஆங்கிலேயர். அவரது பெயர், வில்லியம் ஹென்றி ஸ்லிமன்.

‘தக்’ என்ற ஹிந்தி வார்த்தைக்கு ஏமாற்றுக்காரன் ,மோசடி செய்பவன் என்ற பொருள் வரும்.

இவர்கள் வியாபாரிகளுடன் பயணம் செய்கையில் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து அவர்கள் ஓய்வெடுக்கும் சமயத்தில்  சுருக்குக் கயிற்றை வீசியெறிந்து, அவர்களைக் கழுத்தறுத்து சடலத்தை உடனேயே புதைத்தும் விடுவார்களாம்.

அவர்களின் கொலை பாதகச் செயல்களை வாசிக்கையில் நமது முதுகுத்தண்டு சில்லிட்டு விடுகிறது.

சங்கேத குறியீடுகள், மொழிகளில் பேசி மிகக் கட்டுக்கோப்பான அமைப்பாகத் தலைவனின் கீழ் வழிநடத்தப்பட்ட தக்கர்கள், அன்றைய இந்தியாவில் ஆள்வோருக்குச் சிம்ம சொப்பனமாக இருந்திருக்கின்றனர்.

தக்கர் கொள்ளையர்களைப் பிடிப்பதற்கென்று பிரிட்டிஷார் தனியாகக் காவல் துறை பிரிவு ஒன்றை உருவாக்கினார்கள். அதன் தலைமை பொறுப்பில் மேஜர் ஜெனரல் ஸ்லீமன் என்பவர் இருந்தார். 46 ஆண்டுகள் கடுமையாக உழைத்து இந்த மண்ணில் இருந்து அவர்களை முற்றிலும் அகற்றினார்.

கிட்டத்தட்ட பிரிட்டிஷ் அதிகாரிகள் அனைவரும் தக் ஒழிப்பில் முழுமூச்சாக, கடுமையாக உழைத்ததன் மூலமாக எவ்வாறு தக் கொள்ளையர்கள் ஒழிக்கப்பட்டனர் என்பதை இந்த வரலாற்றுப் புத்தகம் மிகத் தெளிவாக நமக்குத் தருகிறது.

தக்கர்களின் வேட்டை, அந்தத் தக்கர் கொள்ளையர்களை அழிப்பதற்கான வேட்டை இரண்டையும் இந்தப் புத்தகம் மிகத் தெளிவாகவும் முழுமையாகவும் பதிவு செய்திருக்கிறது.

திகில், வன்முறை, துப்பறிதல், சாதுரியம் ,அன்றைய சரித்திர பின்னணி என்று இந்தப் புத்தகம் மூலம்  வரலாற்றின் கருப்புப் பக்கங்களின்  நிகழ்வுகளை அறிகிறோம்.

இந்தியாவின் கடந்த காலத்தைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும், வரலாற்று மாணவர்களுக்கும் இந்தப் புத்தகம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்றால் அது மிகையில்லை.

தக்கர் (கொள்ளையர்கள்)

இரா. வரதராசன்

நூலைப் பெற: Amazon | FlipKart | Dial for Books

விமர்சனம்: ராஜா ஹாசன் 1800 களில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்தபோது அவர்களையே மிரள வைத்த ஒரு கொள்ளைக் கூட்டம் உண்டு என்றால் அது ’தக்’ என […]

Scroll to Top