விமர்சனம்: கதிரவன் ரத்தினவேல்
ஒரு தேசத்தின் முக்கியச் சொத்து அதன் மக்கள். வெறும் எண்ணிக்கையை குறிப்பிடவில்லை. தேசத்தை நேசிக்கும் மக்களைச் சொல்கிறேன். அப்படி நேசிக்க அம்மக்களுக்குத் தனது தேசத்தைப் பற்றி முதலில் தெரிந்திருக்க வேண்டும். இந்தியர்களின், குறிப்பாக தமிழர்களின் மிகப்பெரிய பலவீனம் வரலாற்றறிவு மிகவும் குறைவாக இருப்பதே. பள்ளிப் பாடங்களிலும், வரலாற்று நாவல்களின் வாயிலாகவும் மட்டுமே வரலாற்றினை வாசிப்பார்கள். ஆனால் சோகம் என்னவென்றால் இரண்டின் மூலமாகவும் நவீன இந்தியாவினை அறிந்துக் கொள்வது கடினமானது.
நவீன இந்தியாவின் வரலாற்றை அறிந்துக் கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை, சுதந்திர இந்தியாவின் வரலாற்றையாவது ஆர்வத்துடன் அனைவரும் அறிந்திருக்க வேண்டும். ஆனால் அதைச் சுவாரசியமாக சொல்லித்தர இங்கு யாரும் இல்லை என்பதுதான் சிக்கல். அதற்கான தன் பங்களிப்பாக எழுத்தாளர் இந்த நூலை எழுதி இருக்கிறார். இது கிண்டிலில் எங்கள் கனாவாக வெளியான பொழுதே நான் வாசித்து விட்டேன். இது அப்டேட்டட் வெர்சன். சற்றும் சுவாரசியம் குறையவில்லை. இதற்கு முன்பு இப்படி அடிக்கடி சுவாரசியமாக வாசித்த வரலாற்று புத்தகம் மதனின் ‘வந்தார்கள் வென்றார்கள்’.
இந்தியாவின் விண்வெளிப் பாய்ச்சலின் கதையை மிக மிகச் சுவாரசியமான நடையில் சொல்லும் புத்தகம்தான் ‘இஸ்ரோவின் கதை’. பிரபஞ்சத்தின் துவக்கப்புள்ளியான பெருவெடிப்பில் துவங்கி, அணுவை அறிமுகப்படுத்தி, அணுவின் ஆற்றலை குழந்தைக்கும் புரிவது போல் விளக்கியவர், அறிவியல் பாடத்திலிருந்து அப்படியே சரித்திரத்துக்கு வருகிறார்.
முதல் உலகப்போரில் தொடங்கும் சரித்திரப் பாடம், ஒவ்வொரு கட்டமாக தாண்டுகையில் வரலாற்றோடு நமக்கு அணு அறிவியலும் கற்பிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. இரண்டாம் உலகப் போரில் பாய்ச்சலெடுக்கும் அணு ஆராய்ச்சியினை விளக்கி விட்டு, ஜப்பான் மீதான அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலை விளக்குகிறார். எத்தனை முறை வாசித்தாலும் கண் கலங்கும் இடம் இது. அதிலும் ‘நீதான் புத்தர்’ எனும் இடம், செம டச்சிங்.
அடுத்து இந்தியாவின் அணுக்கரு ஆராய்ச்சி மற்றும் விண்வெளி ஆய்வுகளைப் பற்றி ஆரம்பிக்கிறார். அதன் பின்னர் எங்குமே நிற்காத வேகம். ஒவ்வொரு தலைவர்களின் இறப்பில் மட்டும்தான் நம்மால் நிதானிக்க இயலும்.
இந்திய வரலாற்றின் முக்கியத் தருணங்களையும் உடன் இருந்து பார்ப்பதுபோல் எழுதப்பட்டுள்ள இப்புத்தகம் பல இடங்களில் புல்லரிக்க வைக்கிறது.
இஸ்ரோவின் ஆதி முதல் அந்தம் வரை , ஒவ்வொரு காலகட்டத்திலும் அது சந்தித்த சோதனை, அது அடைந்த வேதனை, உலகைத் திரும்பி பார்க்க வைத்த சாதனைகள் என எதையும் விட்டுவைக்கவில்லை.
எனக்கு ஒரே ஒரு வருத்தம் என்னவென்றால் மங்கல்யான் பகுதியை இன்னும் விரிவாக எழுதி இருக்கலாம். ஏனென்றால் அதை ஏவுவதற்கு இவ்வளவு சிக்கனமாகவும் துல்லியமாகவும் வேறு எந்த நாட்டினராலும் அதுவரை யோசிக்கவே முடிந்திருக்கவில்லை. இயற்கையின் விதிகளை தனக்கு சாதகமாக்கி இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா என வியந்த விசயம் அது. ஆனால் முதலிலேயே அதைப் பற்றிப் பொதுவாக விளக்கிவிட்டதால் திரும்பச் சொல்ல வேண்டாம் என நினைத்து விட்டார் போலும்.
குழந்தைகளின் மொத்த எதிர்காலத்தையே மாற்றவல்லது புத்தகம். அதுவும் இது போன்ற நூல்கள் சிறார் கைகளில் சிக்கினால் அவர்களுக்குள் விதைக்கப்படும் அக்கினிக்குஞ்சு, சமயத்தின் அளக்க முடியாத பேராற்றலாக வெளிப்படும். அப்படியென்றால் இது குழந்தைகள் மட்டும் படிக்க வேண்டிய நூலா என்றால் இல்லவே இல்லை. பின் அட்டையில் குறிப்பிட்டுள்ளதைப்போல இது ஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டிய, கட்டாயம் அறிந்துக் கொள்ள வேண்டிய கதை.
இதன் ஒவ்வொரு அத்தியாயத்தையும் கொஞ்சம் மெனக்கெட்டால் அட்டகாசமான வெப்சீரிசாக மாற்றலாம். ஏற்கெனவே மங்கள்யான் திரைப்படம் வந்துவிட்டது.
வீட்டிற்கொரு நூலகம் வேண்டும் என்பதோடு அதற்கான வழிமுறைகளையும் அண்ணா சொல்லியிருப்பார். அதே நேரம் அதில் கட்டாயம் இருக்க வேண்டிய புத்தகங்கள் பற்றியும் சொல்லியிருப்பார். அப்பட்டியலில் இப்புத்தகத்தை சேர்த்துக் கொள்ள நான் பரிந்துரைக்கிறேன்.
வீட்டில் மட்டுமல்ல, பள்ளி நூலகங்களில் பொது நூலகங்களில் அனைத்திலும் இடம் பெற வேண்டிய முக்கியமான நூல்.
ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு மதத்தைவிட அறிவியல் எவ்வளவு முக்கியமானது என எடுத்துரைக்கும் நூல்.
கட்டாயம் வாசிக்க பரிந்துரைக்கிறேன்.
இஸ்ரோவின் கதை
ஹரிஹரசுதன் தங்கவேலு
நூலைப் பெற: Amazon | FlipKart | Dial for Books