விமர்சனம்: திலகா நாகராஜன்
‘தேடுவது எதுவாக இருந்தாலும் அது கிடைக்க வேண்டும். அதுதான் முயற்சிக்கு மரியதை’ என்று முன்னுரையில் இடம் பெற்றிருந்த இந்த வரிகளே இப்புத்தகத்தைப் பற்றி நல்லதொரு கண்ணோட்டத்தை ஆரம்பத்திலேயே என் எண்ணங்களில் விதைத்துவிட்டது.
ஒரு சில புத்தகங்கள் மட்டுமே எடுத்ததும் கீழே வைக்க விடாமல், தொடர்ந்து வாசிக்கத் தூண்டும். அந்த வரிசையில் இப்புத்தகமும் அடங்கும்.
இப்புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் பதினைந்து தலைப்புகளிலும் வாழ்வின் எதார்த்த உண்மைகளை எவ்வளவு எளிதாக அனைவருக்கும் புரியும் விதத்தில் கூற முடியுமோ, அவ்வளவு எளிமையாகச் சொல்ல வரும் கருத்தை மிகவும் தெளிவுடனும் சுருக்கமாகவும் அறிவியல் பூர்வமாகவும் விளக்கி, ஒவ்வொரு நொடியும் நம்மைச் சிந்திக்க வைக்கும் வண்ணம் வார்த்தைகளைக் கோர்த்து ஈர்க்கும் படியாகப் படைப்பை உருவாக்கியிருக்கிறார் ஆசிரியர்.
’உணர்வுகளை அடக்கு. இல்லையெனில் அது உன்னை அடக்கிவிடும்’.
இது கல்லூரிக் காலத்தில் எப்போதோ எங்கோ படித்த நியாபகம். இந்த வரிகளை மெய்யென நினைத்த எனக்கு, இப்புத்தகத்தை வாசிக்கும்போது இவ்வரிகள் சிறு மாற்றம் செய்ய வேண்டும் என தெரிய வந்தது.
‘உணர்ச்சியை அடக்கு என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. இயற்கையாக நமக்கு வருகிற உணர்ச்சிகள் அனைத்துமே வாழ்க்கைக்கு வண்ணம் சேர்க்கும் விஷயங்கள்தான் என்றும், அவை கொஞ்சம் கூடுதலாகவோ, குறைச்சலாகவோ ஆகும்போது தான் பிரச்சனையே’ என்று மிக தெளிவாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.
இக்யூ -எமோஷனல் இண்டலிஜென்ஸ் என்றால் உணர்வுகளை கையாள்வதில் திறமைசாலி.
வெற்றியாளர்களின் பட்டியலைத் தனியாகப் பிரித்து, அவர்களைக் குறித்து ஆராய்ச்சி செய்ததில், ஐக்யூவின் பங்கு 20 சதவிகிதம் மட்டுமே என்றும், மிக மிக அதிகமான 80 சதவீதத்தை பெற்றிருப்பது இகியூதான் என நிரூபனமாகியிருக்கிறதாம்.
ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் உள்ள ஹோவார்ட் கார்ட்னர் என்ற சைக்காலஜிஸ்ட் எழுதிய கட்டுரை ஒன்றில், மனிதர்களிடம் ஏழு விதமான புத்திசாலித்தனங்கள் இருப்பதாகப் பட்டியலிட்டிருக்கிறார்.
1.வார்த்தைகள் சம்பந்தப்பட்டது
2.தர்க்கம் மற்றும் கணிதம்
3.சங்கீதம்
4.பார்வை, இடங்கள்
5.உடல் சம்பந்தப்பட்டது
6.மனம் சம்பந்தப்பட்டது
7.மற்றவர்களுடன் பழகுவது
வெற்றி பெறுபவர்களிடம் இருக்கும் மிக முக்கியமான குணாதியங்களாக கூறப்பட்டிருப்பவை:
*நம்பகத்தன்மை
*அனுசரித்துப்போகும் குணம்
*இணைந்து பணியாற்றும் தன்மை
வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி மேற்கண்ட மூன்று குணத்தையும் கையாளத் தெரிந்திருந்தால் போதும் வாழ்க்கை வெற்றி பாதையை நோக்கி நிம்மதியாக பயணிக்கலாம் என்று உதாரணத்துடன் கூறியிருக்கிறார்.
ஐக்யூ உங்களுக்கு ஒரு நல்ல உத்தியோகத்தை தரலாம், ஆனால் அதில் முன்னேறி பெரிய இடத்துக்குப் போக வேண்டுமென்றால் நாம் இட்லியாக இருக்க வேண்டும்.
நம்முடைய சிந்தனையை மாற்ற முயன்றால், எளிதாக உணர்வுகளை மாற்றி விட முடியும் என்கிறார்.
மூளையில் இடம்பெற்றிருக்கும் நியோ கார்டெக்ஸ்தான் நம் பகுத்தறிவாம்.
ஆனால் அதை விட மிகப்பெரிய ஸ்பெஷலிஸ்ட் மூளையில் பாதாம் பருப்பு போல உருவமப்பை கொண்டிருக்கும் அமிக்டலாதான். மனித உணர்ச்சிகளை உற்பத்தி செய்கிற ஃபேக்டரி என்று கூறுகிறார்.
யாரொருவருக்கு அமிக்டலாவைச் சரியாக கையாளத் தெரிகிறதோ, அவர் தான் வாழ்வில், தான் நினைத்ததை அடைந்து வாழ்வில் வெற்றியடைகிறாராம்.
அமிக்டலாவும், நியோ கார்டெக்ஸூம் எவ்வாறு , எப்போது செயல்படும்? அவற்றினை எவ்வாறு திசைத்திருப்பலாம்? அதை எப்படி கையாளுவது என்பதை சிறு நிகழ்வுகளின் மூலம் நமக்குப் புரிய வைத்திருக்கிறார் ஆசிரியர்.
அடுத்ததாக எமோஷனல் அவேர்னஸ், செல்ஃப் அவேர்னஸ், எமோஷனல் ஹைஜாக், எனப் பலவற்றையும் குறித்து தெளிவாகக் கூறியிருக்கிறார்.
வெற்றிக்குக் கட்டுபாடு அவசியம். மனக்கட்டுபாடு மிகவும் அவசியம். மனம் எத்தனை ஆசைக்காட்டினாலும், அதைத் தூரத் தள்ளி வைத்துவிட்டு அறிவின் பேச்சை எப்போது கேட்க ஆரம்பிக்கிறோமோ, அந்தக் கணக்கில் இட்லியாக வெற்றியடைகிறோம்.
நம் வாழ்வில் ஒவ்வொரு நொடியும் உணர்வுகளின் தன்மை இடத்திற்கேற்ப மாறிக் கொண்டே இருக்கும். அவை சரியாக கையாளத் தெரியாததால்தான் இங்கு தனிமனித வாழ்விலும், பல இடங்களிலும் பிரச்னைகள் உருவாகின்றன.
உணர்வுகளைக் குறித்த கண்ணோட்டத்தையும், அவற்றைக் கையாளும் திறனையும் சிறப்பாகக் கூறியிருக்கிறார். நான் மிகவும் ரசித்து படித்த புத்தகங்களில் இப்புத்தகமும் ஒன்று.
புத்தகம்:எமோஷனல் இன்டலிஜன்ஸ்
சோம.வள்ளியப்பன்
நூலைப் பெற: Amazon | Flipkart | Dial for Books