மக்களாட்சி என்றும் அழியாது

Blogs / Book Excerpts / மக்களாட்சி என்றும் அழியாது

உலக வரலாற்றை உருமாற்றிய உன்னதமான சொற்பொழிவுகளை எழுத்தாளர் இஸ்க்ரா தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அம்பேத்கர், காந்தி, நேரு, மார்டின் லூதர் கிங், ஐன்ஸ்டைன், காஸ்ட்ரோ, கென்னடி, சர்ச்சில் என்று வரலாற்றின் போக்கை மாற்றியமைத்த மகத்தான தலைவர்களின் மிகச் சிறந்த உரைகள் அடங்கிய தொகுப்பு இது. அந்த நூலில் இடம்பெற்ற அமெரிக்கா முன்னாள் அதிபர் ஆப்ரஹாம் லிங்கனின் சொற்பொழிவு இது. அமெரிக்காவை உருமாற்றிய உரை என்று ஆபிரகாம் லிங்கனின் கெட்டிஸ்பர்க் உரை அழைக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதி.

***

‘சுமார் 87 வருடங்களுக்கு முன்பு, இந்தக் கண்டத்தில் ஒரு புதிய தேசத்தை நம் மூதாதையர்கள் நிர்மாணித்தார்கள். சுதந்தரத்தால் உருப்பெற்ற அத்தேசத்தில் மனிதர்கள் அனைவரும் சரி சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் பெருவிருப்பம்.

ஆனால் நாம் இப்போது அத்தேசத்தின் கடும் உள்நாட்டு யுத்தத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். சுதந்தரமும் சமத்துவமும் ஆழ வேரூன்றிய ஒரு நாடு, இந்தப் பூமியில் நிலைத்திருக்குமா என்ற கேள்விக்கு விடை காண முற்பட்டிருக்கிறோம். யுத்தம் நடந்துகொண்டிருக்கும் அதே களத்தில்தான் இந்தச் சந்திப்பும் நடந்து கொண்டிருக்கிறது.

தேசம் வாழும் பொருட்டு, தன் உயிர் துறந்து உறங்கிக் கொண்டிருக்கும் வீரர்களை உங்கள் மனதில் நிறுத்துங்கள். இந்தப் போர்க்களத்தின் ஒரு மூலையை அவர்களின் கல்லறைக்காக அர்ப்பணிக்கவே நாம் இங்கு ஒன்றுகூடியுள்ளோம். இது நாம் அவர்களுக்குச் செய்யும் கைமாறு. ஒருவகையில் இதுவே பொருத்தமானதும் சரியானதும்கூட.

ஆனால் பொருள் பொதிந்துப் பார்த்தால் வேறொன்றும் தோன்றுகிறது. நம்மால் இந்தப் போர்க்களக் கல்லறையை அவர்களுக்காக அர்ப்பணிக்கவோ புனிதப்படுத்தவோ கௌரவப்படுத்தவோ முடியாது. வாழ்ந்து மடிந்த வீரர்கள் நம் சக்திக்கு மேலாகவே இந்தப் போரைப் புனிதப்படுத்தி இருக்கிறார்கள். கெட்டிக்காரர்கள்!

இங்கே நாம் என்ன சொல்கிறோம் என்பதை இந்த உலகம் ஒருவேளை மறந்துபோகலாம். அல்லது கொஞ்சமேனும் குறிப்பு வைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை ஒருபோதும் மறக்காது.

இதுவரை உன்னதமாக மேற்கொள்ளப்பட்ட இந்தப் போர், வாழும் நமக்காக இவர்கள் செய்த தியாகம் என எண்ணத் தோன்றும். அதற்காகவேனும் நாம் அர்ப்பணிப்போடு நடந்து கொள்ள எதிர்பார்க்கப்படுகிறோம்.

எஞ்சியிருக்கும் பெரும் பணிக்கு முன்னால் அர்ப்பணிப்போடு இருப்பதைக் காட்டிலும் மற்றொன்றும் இருக்கிறது. தங்கள் இறுதி மூச்சைப் பிடித்து நிறுத்தியபோது இவர்கள் கொண்ட தேசாபிமானமே, நம்மை அவர்பால் மரியாதை செலுத்த வைக்கிறது.

இவர்களின் இறப்பு வீணானது அல்ல என்றும் இந்தத் தேசம் சுதந்தரத்தின் புதிய பிறப்பை பெற்றெடுக்க வேண்டும் என்றும்; மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்தி வரும் அரசாங்கம் இம்மண்ணில் என்றென்றைக்கும் அழியாது என்றும் உளமார உறுதியளிப்போம்.’

 

காலத்தின் குரல்
இஸ்க்ரா
நூலைப் பெற: Amazon | Flipkart | Dial for Books

உலக வரலாற்றை உருமாற்றிய உன்னதமான சொற்பொழிவுகளை எழுத்தாளர் இஸ்க்ரா தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அம்பேத்கர், காந்தி, நேரு, மார்டின் லூதர் கிங், ஐன்ஸ்டைன், காஸ்ட்ரோ, கென்னடி, சர்ச்சில் என்று […]

Scroll to Top