மனிதர்களும் பறவைகளும்

Blogs / Book Excerpts / மனிதர்களும் பறவைகளும்

பறவைகளின் வண்ணமயமான உலகுக்குள் நுழைய உதவும் வழிகாட்டி பேராசிரியர் வ.கோகுலா எழுதிய இந்த நூல். ஒரு பறவை எப்படித் தோன்றுகிறது? எப்படி உண்ணவும் உறங்கவும் பறக்கவும் கற்றுக்கொள்கிறது? எப்படிச் செய்திகளைப் பரிமாறிக்கொள்கிறது? எப்படித் தன்னைத் தற்காத்துக்கொள்கிறது? எவ்வாறு கூடு கட்டுகிறது? இறக்கை பறப்பதற்கு மட்டும்தான் உதவுமா? ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு விதமான அலகு இருப்பது ஏன்? பறவைகள் எங்கிருந்து இவ்வளவு அழகிய வண்ணங்களைப் பெறுகின்றன எனப் பறவைகளின் கதையை விவரிக்கிறது இந்நூல். அந்நூலில் இருந்து ஒரு பகுதி.

***

பறவையைப் போல் மனிதனுடன் வேறு எந்த உயிரினமும் அதிக அளவில், வெவ்வேறு பரிணாமத்தில், தொடர்ச்சியான தொடர்பு கொண்டதில்லை. தூது செல்லும் ஊடகமாக, அமைதிக்கு ஓர் அடையாளமாக, இலக்கியத்தில் ஓர் அம்சமாக, படிப்பதற்கு ஒரு பாடமாக, விளையாட்டிற்கு ஓர் உயிர்ப்பொருளாக பறவையே இருக்கிறது.

ஒரு பறவையை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஆர்வம் குன்றாமல் பார்த்துக்கொண்டே இருக்கமுடியும். அப்படியொரு ஈர்ப்புத் தன்மை அதற்கு இருக்கிறது. தொடக்கத்தில் தோன்றிய பல்வேறு நாகரிகங்களிலும் பறவைகள் இறைத் தூதர்களாகக் கருதப்பட்டு வந்தது ஒரு வியக்கத்தக்க செய்தியாகும்.

பறவைகளின் மொழி கடவுளின் மொழியாகவே ஒரு காலத்தில் கருதப்பட்டது. ஒரு பறவை எவ்வாறு பறக்கிறது என்பதை அறிந்தால் எதிர்காலத்தை அறிந்துகொள்ளலாம் என்ற கருத்தும் நிலவியதுண்டு. தமிழில் ‘கழறிற்றறிதல்‘ என்ற சொல் பறவைகளின் மொழி அறிதல் என்ற பொருளைத் தருகிறது.

‘கார்கொண்ட கொடை கழறிற்று அறிவார்க்கும் அடியேன்’ – திருத்தொண்டர் தொகை
‘தென்னர் பிரான் கழறிற்று அறிவான் எனும் சேரலனே’ – திருத்தொண்டர் திருவந்தாதி

சில பறவைகள் நன்மையைக் கொண்டுவரும் என்றும் சில தீமையைக் கொண்டுவரும் என்றும் நம்பப்பட்டது. புறா தாய்மைக்கும் அன்புக்கும் அமைதிக்கும் அடையாளமாகப் போற்றப்படுகிறது. கழுகு இறை தூதர் என்கிறது கிரேக்க இதிகாசம். காகம் அப்போலாவின் தூதர்.

பறவைகள் இலக்கியங்களில் அழகியலோடு வர்ணிக்கப்பட்டுள்ளன. குகை ஓவியங்களிலிருந்து தற்கால ஓவியங்கள்வரை பறவைகளின் உருவங்கள் இடம் பெற்றிருக்கின்றன. பிரான்சிலும் ஸ்பெயினிலும் உள்ள குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட 1400 ஆண்டுக்கு முற்பட்ட ஓவியங்களில் பறவைகள் இடம்பெற்றுள்ளன.

பிகாசோவின் நவீன ஓவியங்களில் பறவைகளின் தாக்கம் இருக்கிறது. ஷேக்ஸ்பியருக்குப் பறவைகள் மீதிருந்த நாட்டம் அவர் படைப்புகளில் வெளிப்படுகிறது. ‘ஷேக்ஸ்பியரின் பறவையியல்’ என்ற பெயரில் ஜேம்ஸ் ஹார்டிங் என்பவர் (James Harting, 1871) ஒரு புத்தகம் எழுதும் அளவிற்கு அவர் நாடகங்களில் பறவைகள் குறித்த செய்திகள் மிகுதியாக இருந்திருக்கின்றன.

0

பல மில்லியன் வருடங்களுக்கு முன் இரு கால்களால் நடக்கும் ஊர்வன ஒன்று டைனோசர்களுடன் வாழ்ந்து வந்தது. காலப்போக்கில் அதன் கடினச் செதில்கள் இலகுவான இறகுகளாகப் பரிணமித்தன. இந்த இறகுகள் அவ்வுயிரியின் உடல் வெப்பநிலையை நிலைப்படுத்த உதவியதால் அதன் செயல்திறன் அதிகரித்தது. அதன் நடை, தாண்டுதல் என்ற நிலையை அடைந்தது. இந்தச் செயல்திறனே படிப்படியாக வானில் உயர வழிவகுத்ததுடன் பறவைகள் எனும் உயிரினப் பிரிவு பின்னாளில் உருவாகக் காரணமாயிற்று.

காக்கைச் சிறகினிலே

வ.கோகுலா

நூலைப் பெற: Amazon | FlipKart | Dial for Books

 

பறவைகளின் வண்ணமயமான உலகுக்குள் நுழைய உதவும் வழிகாட்டி பேராசிரியர் வ.கோகுலா எழுதிய இந்த நூல். ஒரு பறவை எப்படித் தோன்றுகிறது? எப்படி உண்ணவும் உறங்கவும் பறக்கவும் கற்றுக்கொள்கிறது? […]

Scroll to Top