விமர்சனம்: பட்டாபிராமன்
மானஷ் ஃபிராக் பட்டார்சார்ஜீ அவர்கள் எழுதிய ‘Nehru and the Spirit of India’ மிக மிக ஆழமான நூல். தேர்ந்த விவாத செறிவை வைத்துக்கொண்டிருக்கும் நூல். ‘அகாடமிக்’ என ஒதுக்கப்படக் கூடாத நூல்.
மானஷின் இந்த நூலை 2024இல் கிழக்கு பதிப்பகம், ஜனனி ரமேஷ் மொழி பெயர்ப்பில் தமிழில் கொணர்ந்துள்ளனர். ஜனனி ரமேஷ் திறமையான மொழிபெயர்ப்பாளர். அவரின் ஒளரங்கசேப் மொழி பெயர்ப்பு குறித்து முன்னர் ஒருமுறை எழுதியிருக்கிறேன்.
மானஷ் என்கிற நேரு சிந்தனையாளர், இந்திய வரலாற்றாய்வாளர், தத்துவப் பின்புலம் கொண்ட அறிஞர், இந்நூல் வழியே நம்மிடம் வெளிப்படுவார். நேருவின் வரலாறு, அறிவியல், மதம், மரபு மற்றும் நவீனத்துவம், கலாச்சாரம் நாகரீகம், காஷ்மீர் பிரச்சனை – அனைத்திற்கும் மேலாக காலனித்துவத்தும் தந்ததில் கொள்ள வேண்டியவையும், தள்ள வேண்டியவையும் குறித்து இந்நூலில் பெருந்தேடலை மானஷ் பிராக் செய்கிறார்.
கிழக்கு வங்க குடும்பப் பின்னணி- வங்க வட்டார மொழிப்பாட்டுடன், அஸ்ஸாமில், டெல்லியில் இன்னும் இந்தியாவின் எப்பகுதியிலும்தான் இந்த நாட்டின் குடிமகன் தானா- அந்த சொந்தம்கொள்ளும் தன்மையை (Belongingness) தன்னால் ஏன் உணரமுடியா சூழல் என்கிற கேள்விகளின் வெம்மையும் அவரது உளவியலில் தொழிற்படுவதைக் காணலாம்.
நேரு தன் காலத்தில் தான் சுவீகரிப்பாகப் பெற்ற இந்தியாவை எப்படிக் கண்டறியப் பார்த்தார் என்பதைப் பேசும் அறிமுக இயல். அடுத்தடுத்த இயல்களில் காலனித்துவம், குடிமகன் அரசின் மதச் சார்பின்மை தொழிற்பாடு, கலாச்சாரம், வரலாற்றை நிகழ்காலக் கண்ணாடிக்கு பொருத்தும் தன்மைகளை மானஷ் விவாதித்துச் செல்கிறார்.
வரலாற்றை அறிகிறோம் என்கிற பெயரில் மிகைப்படுத்தல்களை உண்மையாக்க முயற்சித்தல், நிதானத்தை இழந்து போடும் கூச்சல்கள் குறித்து நம் ஒவ்வொருவரைப் போலவே அறிவார்ந்த தளத்தில் மானஷ் கவலை கொள்கிறார். நேரு வெறுமனே ஐரோப்பியக் கருவிகளின் மூலம் மட்டுமே இந்தியாவை உணர முயற்சிக்கவில்லை என்கிறார் மானஷ். அரசியலையும் கலாச்சாரத்தையும் வெறுப்பை நுழைக்காமல் பொருத்தமாகக் கலந்து பார்க்க வேண்டிய இந்தியா நேருவிற்குத் தேவைப்பட்டது என நான் புரிந்துகொள்கிறேன்.
ஜனநாயகத்திற்கு முக்கியமானது அதன் அரசியல் மற்றும் அது உத்தரவாதப்படுத்தும் சமூக ஒற்றுமையும் ஆகும். சமூக ஒற்றுமையை எப்போதும் பதற்றத்தில் வைக்கும் அரசியல் சூழல் கவலைக்குரிய ஒன்றே.
காஷ்மீர் விஷயத்தில் நேருவிற்கு எமோஷனல் தன்மையும், ஊசலாட்ட உணர்வுகளும் இருந்தன என்கிறார் மானஷ் . அதே நேரத்தில் அரசியல் நம்பிக்கையை மத உணர்வுகளின் அடிப்படையில் அமைக்கக் கூடாது என்கிற தெளிவு அவரிடம் இருந்தது. ஆனால் ஷேக் அப்துல்லா மீதான எதிர்பார்ப்புகளையும் அவரது நட்பு கொண்டிருந்தது. நட்பின் அரசியலும் அவசியம் என அவர் கருதாமல் இல்லை. வதந்திகள் சில நேரம் உன்னத நட்பையும் கவிழ்த்துவிடும் என்கிறார் மானஷ். ‘நட்பின் அரசியல்’ என்கிற கார்ல் சிமிட் நூலையும் அவர் சொல்கிறார். ஏராள நூல்கள் ஆசிரியர்கள் இந்நூலில் வந்து போகின்றனர்.
நேரு தன்னை குறித்த பெருமிதம் கொண்டவராக இருந்தாலும் , தன் லிமிட்டேஷன் உணர்வையும் அவர் கொண்டவராக இருந்தார். வரலாற்றின் திறவுகோலைத் தான் கொண்டிருப்பதாக அவர் கருதாமல் இருந்தார் என மானஷ் சொல்கிறார். இந்திய பிரச்னைகளோ இந்திய ஜனநாயகத்தைவிடப் பழமையானவை என அவர் அறிந்திருந்தார்.
நவீனம் என்பதைப் பேசும்போதுதான் ‘மரபு’ என்பதும் தன் தனித்துவ நாற்காலியைக் கோருகிறது. நவீனத்திற்கு முன்பு மரபு என அது தன்னை அழைத்துக்கொண்டிருக்க முடியுமா? இந்திய ஜனநாயகத்தைக் கொண்டு சமத்துவ மதிப்புக்களை இந்தப் பழம்பெரும் சமூகத்தில் நல்லிணக்கப்படுத்த இயலுமா- ஒத்திசைவை உருவாக்க முடியுமா என நேரு பார்த்தார்.
மார்க்சையும், சோவியத் பற்றியும் நேரு அறியாமல் இல்லை. அந்நியமாதல் என்பது பொருளாதாரத் தளத்தில் மட்டுமல்லாமல், ஆன்மீக கலாச்சாரத் தளத்திலும் நிகழ்வதை அம்பேத்கர், நேரு போன்றவர் பார்க்கவே செய்தனர்.
மானஷ் சொல்கிற இக்கருத்தில் பலர் மாறுபடலாம். அவர் மார்க்சியம், தாராளமயம் இரண்டும் தீவிர வரலாற்றுப் பிரச்சனைகளில் உதவவில்லை என மதிப்பிடுகிறார். மேலும் மானஷ், யாரோ ஒருவர் சுதந்திரமாக இருக்கிறார் எனில், பகுத்தறிவு மற்றும் அவரின் சொந்த மேன்மை, ஏனையோர் மீது நிலைநிறுத்தப்பட்டுள்ளது எனச் சொல்கிறார். இங்கெல்லாம் மானஷின் விளக்கம் போதுமா என என்னால் ஊகிக்க முடியவில்லை.
இன்றைய சமூகத்தில் உண்மையோ, பொய்யோ அதை அரசியல் கலப்பில்லாமல் அதிசயமாக்க முடியாது என்கிறார் மானஷ். பகுத்தறிவால் விளக்க முடியாததை அதிசயம் என்கிறோம்- ‘பிள்ளையார் பால் குடித்தார்’ என மக்கள் நம்பவும் செய்கிறார்களே எனக் கேள்வியை மானஷ் வைக்கிறார். அனைத்து பாரம்பரிய நம்பிக்கைகளிலிருந்தும், வரலாற்றுத் தப்பெண்ணங்களிலிருந்தும், மக்களை விடுவிப்பதாகப் பேசிய ‘பகுத்தறிவு மந்திரக்கோல்’ வேலை செய்யவில்லை என்கிறார் மானஷ்.
நேருகூட ஐரோப்பாவில் நடந்ததுபோல், இந்தியாவில் மதத்துக்கும் அறிவியலுக்குமான மோதல் கசப்பாகும் எனக் கருதவில்லை என்பதை மானஷ் சுட்டிக் காட்டுகிறார். அறிவியலுக்கும் ஜோதிடத்துக்கும் வித்தியாசம் அறிந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் இரண்டிலும் ஈடுபாட்டுடன் இருப்பதை மானஷ் சொல்கிறார். விஞ்ஞானிகள் சமூகத்தின் மனிதர்கள் தானே.
சாதி என்பது மனித இழிவு என நேரு பார்த்தார். அது இந்திய சமூகக் கட்டமைப்பின் அழிவிற்கான விதைகள். அது சமூகத்தின் பெருந்தோல்வி என நேரு நினைத்தார். நவீன எண்ணங்களையும், இடைக்காலப் பழக்க வழக்கங்களில் ஊறின சமூகமாக இந்தியாவை நேரு பெற்றார். நாமும் அப்படியான இந்தியாவையே பெற்று, அதை நவீனமாக்க முடியுமா என்கிற போராட்டங்களின் சாட்சியாக நிற்கிறோம். அதே நேரத்தில் ஆட்சியாளர்கள் காலனித்துவ வழிகளைப் போலியாக பின்பற்றிய சவாலும் கூடவே வந்தது என்கிறார் மானஷ். இதனால்தான் பிரிட்டிஷ் ஆட்சியே மேல் என்கிற அரசியல் குரல்கள் வந்தன என்கிறார்.
கலாச்சார அரசியல் என்பது அதிகாரப் போட்டியைச் சுற்றியே நிகழ்கிறது என்பதை மானஷ் இந்நூலில் தெளிவுபடுத்துகிறார். எதை அனுமதிப்போம், எவர்களை அனுமதிப்போம் என்கிற மேலாதிக்கத்தின் அங்கீகாரத்திற்காக அது போராடும்.
நேரு தொடங்கி, இந்திய மார்க்சிஸ்ட் மற்றும் தாராளவாத மதசார்பற்ற சிந்தையாளர்களிடம் ‘அறிவுசார் விரக்தி’ ஏற்பட்டுள்ளதாக மானுஷ் மதிப்பிடுகிறார்.நேருவின் இக்கூற்றை நாம் கவனிக்காமல் விடமுடியவில்லை. நான் யாரை பிரதிநிதித்துவப் படுத்துகிறேன் என அவர் கேட்டுக்கொண்டார். கிழக்கு மேற்கின் விசித்திர கலவையா நான் எனக் கேட்டுக்கொண்டார். நான் மேற்குலகிலும் அந்நியன். சொந்த நாட்டிலும் , சில நேரம், நாடு கடத்தப்பட்ட உணர்வு உள்ளது. இது பெரும் வலியின் வெளிப்பாடு. நவீனத்துவமான நான் இந்தியாவில் எப்படிப் பொருந்துவேன் என்கிற நேர்மையான கேள்வியை அவர் தனக்குத்தானே எதிர்கொண்டார். தான் எதிர்கொள்ளும் அதே நவீனத்துவத்தை, இந்தியா எப்படி எதிர்கொள்ளும் என்கிற பெரிய கவலை நேருவைக் கவ்விபிடித்திருந்ததது.
பாஜக அரசாங்கம் கொணர்ந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் பற்றியும், அரசியலமைப்பு அவையில் நடந்த விவாதங்களையும் மானஷ் விரிவாக விளக்குகிறார். ‘அப்பீஸ்மெண்ட்’ என்ற குற்றச்சாட்டு வரும்போதெல்லாம், நேரு கடுமையாக எதிர்வினை புரிந்ததை மானஷ் சொல்கிறார். ஒரே ஒரு கலாச்சாரம் என்கிற அழைப்பை , ஒரே கலாச்சார பாதைக்கான ஆபத்தான அழைப்பு என அவர் கருதினார்.
இந்தியாவில் நடந்த காலனித்துவ எதிர்ப்பு இயக்கம் ஒற்றை இயக்கமாக இல்லாமல், பலவற்றின் இயக்கமாக உள்போட்டிகளுடன் இருந்தது.
இந்து வலதுசாரிகளின் சோகமான முரண்பாடு என்னவெனில், பிரிவினையின் தர்க்கத்தை அது ஏற்காது. ஆனாலும் அந்த தர்க்கத்தின் வெற்றியால்தான், அதன் அரசியல் தூண்டப்படுகிறது என்பதைத் தெளிவான கருத்தாக்கமாக மானேஷ் இந்நூலில் முன் கொணர்கிறார்.
விரிவஞ்சி நிறுத்துகிறேன். நேரு ஆர்வலர்கள் தேடிப் படிக்க வேண்டிய நூல். மொழி பெயர்த்து பெரும் உழைப்பை தந்துள்ள ஜனனி ரமேஷ்க்கு என் வாழ்த்துகள்.
நேருவின் இந்தியா
மானஷ் ஃபிராக் பட்டார்சார்ஜீ
தமிழில்: ஜனனி ரமேஷ்
நூலைப் பெற: Amazon | Flipkart | Dial for Books