நம் காலத்தின் சமூகக் கொடுமைகளுள் ஒன்றான ஆணவக்கொலையை உள்ளார்ந்து புரிந்துகொள்ள உதவும் புத்தகமே, ‘சாதியின் பெயரால்’. சமூக நீதியை உயர்த்திப் பிடிக்கும் ஒரு மாநிலத்தில் சாதிவெறி எவ்வாறு வேர்கொண்டது; எவ்வாறு சமூக அமைப்புகள் எங்கும் நீக்கமறப் பரவியது; நீதியை, சமத்துவத்தை, அடிப்படை மனிதத்தன்மையை எவ்வாறு அழித்தொழித்தது என்பதை தரவுகளோடு காட்சிப்படுத்துகிறார் இந்நூலின் ஆசிரியர் இளங்கோவன் ராஜசேகரன். காவல் துறை ஆவணங்கள், நீதிமன்றத் தீர்ப்புகள், ஆய்வறிக்கைகள், கள அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்நூலைக் கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்நூலில் இருந்து சில பகுதிகள்.
***
நக்சல்பாரி இயக்கத்தின் மறைவு ஏற்படுத்திய வெற்றிடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டகம்போல் நுழைந்த சாதி அரசியல் முழு கூடாரத்தையும் விரைவில் கைப்பற்றிக்கொண்டது. கூர்மையான சமூக, அரசியல் கண்ணோட்டங்கள் வலுவிழக்க ஆரம்பித்தன. வர்க்க உணர்வுகள் பொலபொலவென்று உதிர்ந்துபோயின. விவசாயிகள், தொழிலாளிகள், ஏழைகள், புறக்கணிக்கப்பட்டவர்கள் என்றெல்லாம் அதுவரை தங்களை முன்னிலைப்படுத்திவந்தவர்கள் இப்போது சாதியின் பெயரால் அடையாளம் கண்டு, பிரிந்து செல்ல ஆரம்பித்தனர்.
2005ஆம் ஆண்டு தொடங்கி வன்னியர் சங்கம் உள்ளிட்ட பல சாதி அமைப்புகள் நாயக்கன் கோட்டைக்குள்ளும் சுற்று வட்டாரங்களிலும் ஊடுருவி, செல்வாக்கு பெற ஆரம்பித்தன. சாதி உணர்வோடு சேர்ந்து ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம், பழமைவாதம் உள்ளிட்ட பிற்போக்கான குணங்களும் மக்களைப் பற்றிக்கொண்டன. இந்நிலைக்கு இடதுசாரிகளும் ஒரு வகையில் காரணம் என்றே சொல்லவேண்டும். மாறிவரும் அரசியல் சூழலை உன்னிப்பாகக் கவனித்து, சரியான தருணத்தில் சரியான அரசியலை மக்களிடம் கொண்டுசென்று சேர்க்க அவர்கள் தவறிவிட்டார்கள்.
நக்சல்பாரிகள் பலமிழந்துவிட்டதை உணர்ந்ததுமே சிபிஐ, சிபிஎம் இரண்டும் தருமபுரியில் களப்பணிகளைத் தொடங்கியிருக்கவேண்டும். ஏற்கெனவே அரசியல்மயப்படுத்தப்பட்டிருந்த மக்களிடம் சற்று முயன்றிருந்தால் இந்த இரு கட்சிகளுமே நெருங்கியிருக்கமுடியும். வன்முறை போராட்டத்தில் நம்பிக்கையற்ற, அதே சமயம் புரட்சிகரக் கருத்துகளின் தாக்கத்துக்கு முன்பே உள்ளாகியிருந்த இம்மக்கள் இடதுசாரிகளோடு கரம் கோத்திருப்பார்கள். ஒருவிதமான கோட்பாட்டு வெற்றிடம் நிலவியது உண்மை என்று சிபிஎம்மின் அப்போதைய மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணனும் ஒப்புக்கொண்டார்.
இதற்கிடையில் சாதி அடையாளம் கூர்மையடைந்ததைத் தொடர்ந்து கலப்பு மணத்துக்கு எதிரான குரல் வலுவாக ஒலிக்கத் தொடங்கியது. வன்னியர்களும் கொங்கு வேளாளர்களும் இதில் முன்னணியில் இருந்தனர். நம் சாதியைச் சேர்ந்தவர்கள் நமக்குள்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்றும் பிற சாதிகளோடு ரத்தக் கலப்பு செய்வது குற்றமாகும் என்றும் இவர்கள் வெளிப்படையாகவே பரப்புரை மேற்கொள்ளத் தொடங்கினர். இவ்வாறு செய்வது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்பதை அவர்கள் பொருட்படுத்தியதாகவும் தெரியவில்லை.
திருமணம் இவ்வாறாக ஓர் அரசியல் செயல்பாடாக மாற்றமடைந்தது. சாதித் தூய்மையைக் காப்பதே ஒவ்வொரு திருமணத்தின் முதலும் இறுதியுமான குறிக்கோளாகச் சித்திரிக்கப்பட்டது. சாதித் தூய்மை என்னும் கருத்தாக்கத்தை உடைக்கவேண்டுமானால் கலப்பு மணங்களை ஊக்குவித்தாகவேண்டும். ‘சாதி இறுக்கத்தைக் குறைக்க கலப்புத் திருமணங்களை அதிக அளவில் ஊக்குவிக்கவேண்டும். கட்சியின் ஆதரவோடு இது நடைபெறவேண்டியது முக்கியம். கலப்பு மணம் செய்துகொண்ட தம்பதிகளோடுதான் நாங்கள் நிற்கிறோம் என்பதை உணர்த்தவேண்டியது காலத்தின் தேவை’ என்கிறார் சிபிஎம் மூத்தத் தலைவர் கே. பாலகிருஷ்ணன். இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்புமூலமாக நாயக்கன் கோட்டை இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியைத் தொடங்கவிருக்கிறோம் என்றார் ஹரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி. தில்லிபாபு. இளவரசன் திவ்யா திருமணத்துக்குப் பிறகு, ஒரு கலவரம் நடந்து முடிந்த பிறகு, இந்த உண்மையை இடதுசாரிகள் உணர்ந்துகொண்டனர். அதற்குள் எல்லாமே மாறிவிட்டிருந்தது.
சுயமரியாதை இயக்கத்தை வளர்த்தெடுத்த நிலத்தில் சாதிப் பெருமித உணர்வு இப்படி ஆதிக்கம் செலுத்துவது உண்மையிலேயே வருத்தமாக இருக்கிறது என்கிறார் கலவர இடத்தை நேரில் வந்து கண்ட சிபிஐயின் மூத்தத் தலைவர் ஆர். நல்லக்கண்ணு. ‘ஒரு நாகரிக சமுதாயத்தில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழவே கூடாது. சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை ஏற்கும் எவரும் கலப்பு மணங்களை ஏற்கவே செய்வர். மாறிவரும் சமூக விழுமியங்களின் அடையாளம் இத்தகைய திருமணங்கள். சாதிப் படிநிலையை உயர்த்திப் பிடிக்கும் எவரும் எதிர்க்கப்படவேண்டும்’.
1980களிலும் 1990களிலும் இம்மாவட்டத்தில் 25 கலப்பு மணங்கள் நடைபெற்றிருக்கின்றன. இவற்றுள் பெரும்பாலானவை தலித்துகளுக்கும் வன்னியர்களுக்கும் இடையிலானவை. அப்போதெல்லாம் இத்தனை பெரிய எதிர்ப்புகளும் கலவரங்களும் தோன்றியதில்லை என்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது சிபிஐ (எம்எல்) கட்சி நினைவூட்டியது.
0
சாதி சங்கங்களின் பரவலுக்கும் வெறுப்புப் பேச்சின் வளர்ச்சிக்கும் நேரடித் தொடர்பிருக்கிறது. வன்னியர் சங்கத்திலிருந்து உருவாகி வளர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தனது செல்வாக்கைத் திரட்டிக்கொள்ள சாதி அரசியலுக்குள் தஞ்சம் புகுந்துகொண்டது. தலித்துகள்மீதான வெறுப்புப் பிரசாரம் பலம்பெறத் தொடங்கியது. அனல் பறக்கும் பேச்சாளராகக் கருதப்பட்ட காடுவெட்டி குரு சர்ச்சைக்குரியவராகவும் தலித்துகளைக் கூர்மையாகத் தாக்கிப் பேசுபவராகவும் இருந்தார். ஏப்ரல் 2012இல் மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் இளைஞர் விழாவில் காடுவெட்டி குரு ஆற்றிய உரையில் ஆவேசமும் வன்மமும் நிறைந்திருந்தன. தலித்துகளிடம் வன்னியர்கள் ஏமாறக்கூடாது என்றும் அவர்கள் விரிக்கும் காதல் வலையில் நம் பெண்கள் சிக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டதோடு நில்லாமல், வெளிப்படையாகவே வன்முறைக்கு அறைகூவல் விடுத்தார். ஒரு வன்னியர் பெண்ணைப் பிற சாதியைச் சேர்ந்த யார் காதலித்து மணந்துகொண்டாலும் அவன் அழிக்கப்படவேண்டும் என்று கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் முழங்கினார் காடுவெட்டி குரு. அடுத்த சில தினங்களில் வன்முறை வெடித்தது.

சாதியின் பெயரால்
இளங்கோவன் ராஜசேகரன்
நூலைப் பெற: Amazon | FlipKart | Dial for Books