சேரர்களின் கடற்போர்

Blogs / Book Excerpts / சேரர்களின் கடற்போர்

பண்டைய காலம் முதல் நவீன காலம் வரையிலான தமிழகத்தின் கதையைப் போர்களின்மூலம் தெரிந்துகொள்ள உதவும் ஒரு வரலாற்று வழிகாட்டி, இந்நூல். போர்களின் வெற்றி தோல்விகளே தமிழகத்தின் திசைப்போக்கைத் தீர்மானித்தன. இந்நூலில் புறநானூறு, அகநானூறு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை என்று இலக்கிய ஆதாரங்கள் ஒரு பக்கம் அணிவகுக்கின்றன என்றால் கல்வெட்டுகள், செப்பேடுகள் என்று வரலாற்றுத் தரவுகள் இன்னொரு பக்கம் பலம் சேர்க்கின்றன. சங்க காலம் தொடங்கி ஐரோப்பியரின் வருகைக்குச் சற்று முன்பு வரையிலான போர்க்களங்களை நம் கண் முன்னால் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் எஸ். கிருஷ்ணன். அந்நூலில் இருந்து ஒரு பகுதி.

***

தமிழர்களின் கடற்படை என்றவுடன் நமக்கு உடனே நினைவுக்கு வருவது சோழர்கள்தான். அதிலும் ராஜராஜனும் ராஜேந்திரனும் கடல் கடந்து பெற்ற வெற்றிகள் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. இதனால் சோழர்களிடம் மட்டுமே கடற்படை இருந்தது என்ற பிம்பம் உருவாக்கப்பட்டுவிட்டது.

ஆனால் சங்க காலத்திலிருந்தே பாண்டியர்களிடமும் சேரர்களிடமும் வலுவான கடற்படை இருந்தது என்றும் அதைக் கொண்டு அவர்கள் வெற்றிகள் பல பெற்றார்கள் என்பதையும் பல குறிப்புகள் மூலம் அறியமுடிகிறது. அப்படிப்பட்ட கடற்போர் ஒன்றை இங்கே பார்க்கலாம்.

சங்க காலத்து சேர அரசு வடக்கே ஹோனவார் என்று தற்போது அழைக்கப்படும் வானவாற்றிலிருந்து தெற்கே குமரி வரை பரந்திருந்தது. இப்படி நீண்ட கடற்கரையைக் கொண்டிருந்ததால் கடல் மூலம் நிகழ்ந்த வணிகச் செழிப்புமிக்க நாடாக ஒருபுறம் இருந்தாலும் கடல் புறத்திலிருந்து அடிக்கடி வரும் தொல்லைகளை முறியடிக்க வேண்டிய கட்டாயத்திலும் சேர நாடு இருந்தது. அக்காலச் சேர மன்னர்களில் சிறப்பாக ஆட்சி செய்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.

இமயமலைக்குச் சென்று சேரர்களின் வில் சின்னத்தை அங்கே பொறித்ததால் அவனுக்கு இமயவரம்பன் என்ற பெயர் வந்ததாகச் சொல்வதுண்டு. அவன் மாந்தை என்று அழைக்கப்பட்ட இடத்திலிருந்து ஆட்சி செய்து கொண்டிருந்தான். இது இப்போது கேரளாவில் கண்ணனூருக்கு அருகே இருக்கிறது. பழையங்காடிப் புகைவண்டி நிலையம் இதன் ஒரு பகுதி என்று ஆய்வாளர் ஔவை துரைசாமி குறிப்பிடுகிறார். ‘துறை கெழுமாந்தை‘, ‘கடல் கெழுமாந்தை‘ என்றெல்லாம் இந்நகரம் புகழப்பட்டிருக்கிறது.

ஏகிடித் தீவு, கூவகத்தீவு என்று அப்போது அழைக்கப்பட்ட கோவாவிலிருந்து தொடங்கி அரபிக்கடலில் கொங்கணக் கரையோரம் உள்ள பல தீவுகளில் கடம்பர் என்ற இனத்தினர் வசித்து வந்தனர். அவர்களுடைய தலைமையிடமாக கடம்பத் தீவு இருந்தது (Kadmat Island). அந்தத் தீவில் கடம்ப மரம் ஒன்றை காவல் மரமாக வைத்து வழிபட்டு வந்தனர் கடம்பர்கள்.

பலவகை குடிகள் இவர்களில் உண்டு. கடலோடும் இனத்தினரான இவர்களுக்கு மீன் பிடிப்பது தொழிலாக இருந்தது. இருந்தாலும் அவர்களில் சிலர் கொள்ளையடிப்பதையும் தொழிலாகக் கொண்டிருந்தனர். அரபிக் கடலில் வரும் வணிகக் கப்பல்களைக் கொள்ளையடித்தும், அவ்வப்போது சேர நாட்டுக் கடற்கரையில் திடீர்த் தாக்குதல்கள் நடத்தி ஊர்களைச் சூறையாடியும் அட்டகாசம் செய்து வந்தனர் இந்தக் கூட்டத்தினர். இதனால் பாதிக்கப்பட்ட சேரநாட்டின் மக்கள், அரசனான நெடுஞ்சேரலாதனிடம் முறையிட்டனர். கடம்பர்களை ஒடுக்க நினைத்த சேரலாதன் ஒரு பெரும் கடற்படையோடு கிளம்பினான்.

கடம்பர்களும் கடற்போர்களில் சளைத்தவர்கள் அல்லர். அவர்களிடமும் வலுவான கடற்படை இருந்தது. வாட்போரிலும் அவர்கள் வல்லவர்களாக இருந்தனராம். எதிர்த்து நின்றவர்களை எல்லாம் வாள் சண்டையில் வென்று அவர்களுடைய நாட்டைக் கவர்ந்து கொள்ளும் திறன் கடம்பர்களிடம் இருந்தது என்கிறது பதிற்றுப்பத்து என்ற சங்க இலக்கியம்.

பழங்கோவாவில் உள்ள அவர்களுடைய நடுகற்களில் கடம்பர்களின் கப்பல்களும், படை வீரர்களும் செதுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். ஆயிரம் கலங்களைக்கூட விரைவில் திரட்ட வல்லவர்கள் கடம்பர்கள் என்று அவர்களுடைய கடற்படைத் திறனைப் பற்றிச் சொல்வதுண்டு.

தம்மை எதிர்த்து வந்த சேரர்களோடு கடலில் மோதினர் கடம்பர்கள். சேரர் கடற்படையும் கடம்பர் படையும் கடுமையாகச் சண்டையிட்டன. கடம்பர் கலங்களைத் தீக்கிரையாக்கிவிட்டு சேரர் படை கடம்பத்தீவில் புகுந்தது. நெடுஞ்சேரலாதனே நேரடியாகக் களத்தில் இறங்கினான்.

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள்
எஸ்.கிருஷ்ணன்

நூலைப் பெற: Amazon | FlipKart | Dial for Books

பண்டைய காலம் முதல் நவீன காலம் வரையிலான தமிழகத்தின் கதையைப் போர்களின்மூலம் தெரிந்துகொள்ள உதவும் ஒரு வரலாற்று வழிகாட்டி, இந்நூல். போர்களின் வெற்றி தோல்விகளே தமிழகத்தின் திசைப்போக்கைத் […]

Scroll to Top