மதுரை என்பது மற்றொரு நகரல்ல. அது வரலாறு வாழும் நகரம். தமிழக அரசியல் அதன் அத்தனை பரிமாணங்களோடும் உயிர்த்திருக்கும் ஓர் அபூர்வ பிரதேசம். சினிமா என்பது இங்கே வெறும் பொழுதுபோக்கு அல்ல; ஒவ்வொரு மதுரைவாசியின் ரத்தத்தோடும் சதையோடும் ஒன்று கலந்திருக்கும் ஒரு மந்திர சக்தி.
சினிமாவும் அரசியலும் இங்குள்ளதைப் போல் வேறு எங்கும் அழுத்தமாக இணைந்திருந்ததில்லை. ஒன்றோடொன்று உரையாடிக்கொண்டதில்லை. விறுவிறுப்பாக மோதிக்கொண்டதும் இல்லை.
மதுரை என்னும் வண்ணமயமான ஒரு நகரம் மட்டுமல்ல. துடிதுடிப்பான ஒரு தனி உலகமும்கூட. அந்த உலகை மிக அழகாக இந்நூலில் காட்சிப்படுத்தியிருக்கிறார் அங்கே பிறந்து வளர்ந்தவரான ஜீவசகாப்தன்.
திரையரங்கு, சினிமா, ரசிகர்கள் என முப்பரிணாமத் தொடர்பு குறித்து எழுதும்போது பார்வையாளர்களுக்கு ஏற்படும் சுவாராஸ்யத்தை, மதுரையின் தேர்தல் அரசியல் குறித்து பேசும்போது இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறார். காந்தியில் தொடங்கி கமலஹாசன் வரை மதுரை என்ற நகர் ஏற்படுத்தியிருக்கும் வரலாற்றுச் சுவடுகளைச் சுவையாக இந்நூலில் பதிவு செய்கிறார் ஜீவசகாப்தன்.