விமர்சனம்: பாலு முருகன்
யூதர்கள். உலகில் அதிக இன்னல்களைச் சந்தித்த இனம் எதுவென்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு கூறிவிடலாம் அது யூதர்கள்தான் என்று. ஆதிகாலம் தொட்டே அவர்கள் சந்தித்த இன்னல்கள் ஏராளம். அதில் உச்சகட்டம்தான் இரண்டாம் உலகப் போரில் ஜெர்மன் சர்வாதிகாரியின் வெறிச்செயல். கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் என்று வேற்று மதத்தினரும் தங்கள் வன்மத்தை யாரிடமாவது காட்ட வேண்டும் என்றால் தயங்காமல் அவர்கள் தேர்ந்தெடுப்பது யூதர்களைதான். இத்தனைக்கும் அந்த இரண்டு மதங்களும் இவர்களில் இருந்து உருவானதுதான். இருந்தும், அவர்களை ஏன் வெறுக்கிறார்கள் என்பதற்கு முக்கியமான காரணமாக கூறப்படுவது ‘இயேசுநாதரை கொன்றார்கள்’ என்பதுதான். தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் இஸ்ரேல் பாலஸ்தீனம் போரின் ஆதாரப்புள்ளி தொடங்கும் இடமும் யூதர்கள்தான். அவர்களின் வரலாற்றையும் வாழ்க்கையையும் தொகுத்து முகில் அவர்கள் கொடுத்திருக்கும் மிக அற்புதமான புத்தகம் தான் இந்த ‘யூதர்கள்’.
புத்தகம் மொத்தம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி ‘பைபிள் காலம்’. யூதர்களின் வரலாறு ஆபிரகாமில் இருந்து ஆரம்பிக்கிறது கடவுள் அவரிடம் பேச ஆரம்பிக்கிறார். அவரின் வாரிசாக வருபவர்கள்தான் இஸ்ரவேலர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். பின் அவரது சந்ததியினர்கள் ஒவ்வொருவராகக் கடவுளிடம் பேசும் சக்தியைப் பெற்று மக்களுக்கு அதனை எடுத்துக் கூறுகின்றனர். அப்படித்தான் யூதர்களின் 10 கட்டளைகள் உருவாகின. அந்த வழியில் வந்தவர்களில் மோசஸ் மிகவும் முக்கியமானவர். எகிப்தில் அடிமைப்பட்டு கிடந்த யூதர்களைக் கடவுள் மோசஸ் மூலம்தான் அழைத்துச் சென்றார். மோசஸ் ‘தன் இன மக்களை கடவுள் அழைத்துக்கொண்டு போக தன்னை அனுப்பினார்’ என்று எகிப்து மன்னனிடம் கூற அவனோ அவ்வாறு அனுப்ப முடியாது என்று மறுத்து விடுகிறான். இதை மோசஸ் கடவுளிடம் கூற, கடவுள் எகிப்தின் மீது பலவிதமான நோய்களை அனுப்புகிறார். கடைசியில் எகிப்து மன்னன் ஒப்புக் கொள்கிறான். அவர்களை அழைத்துக் கொண்டு மோசஸ் செல்லும் பொழுது மனம் மாறிய எகிப்து மன்னன், மீண்டும் அவர்களைத் துரத்திச் செல்கிறான். இடையில் செங்கடல் குறிக்கிடுகிறது. மோசஸ் கடவுளின் உதவியுடன் செங்கடலை இரண்டாகப் பிளந்து மக்களை அந்தப் பக்கம் அழைத்து சென்று விடுகிறார். ஆனால் எகிப்து மன்னனும் அவரது படைகளும் செங்கடலுக்குள் மாட்டிக்கொண்டு இறந்து விடுகிறார்கள். மோசஸ் அவ்வாறு அழைத்துக் கொண்டு வந்ததை யூதர்கள் ‘Exodus’ என்று அழைக்கிறார்கள் (இதை அடிப்படையாக வைத்து ஒரு திரைப்படமும் உள்ளது).
அதன் பின் அந்தத் தலைமுறைகளில் தாவீது கோலியாத் கதையை அனைவரும் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அவர்களின் புனித தேவாலயமான சாலமோன் தேவாலயம் இடிக்கப்பட்டு தற்பொழுது ஒரே ஒரு சுவர் மட்டும் மிஞ்சி இருக்கிறது. அதைத்தான் தற்பொழுதும் அவர்கள் தொழுகிறார்கள்.
இரண்டாம் பாகம் வரலாறு. தற்பொழுது இயேசு பிறக்கிறார். அவர் தன்னை ஒரு தேவதூதனாக உணர்ந்து பல அற்புதங்களைச் செய்ய ஆரம்பிக்கிறார். இதனைப் பொறுக்காத யூதர்கள் அவரின் மேல் பல குற்றங்களைச் சுமத்துகிறார்கள். அவரை கொலை செய்ய பலமுறை முயற்சி செய்தும் அவர் தப்பித்துக் கொண்டே இருந்தார். கடவுள் முதல் ஆறு நாட்களில் உலகைப் படைத்து ஏழாவது நாள் ஓய்வு எடுத்துக் கொண்டார் என்று நம்பும் யூதர்கள், சனிக்கிழமை எந்த வேலையும் செய்வதில்லை. அவ்வாறு ஒரு சனிக்கிழமை உடல் ஊனமுற்ற ஒருவன் இயேசுவிடம் வந்து தன்னைக் குணப்படுத்துமாறு கேட்கிறான். அவரும் குணப்படுத்துகிறார். இதனை கண்ட யூத குருமார்கள் அவரின் மேல் ஆத்திரம் அடைகிறார்கள். பிறகுதான் அவருடைய சீடர்களில் ஒருவனான யூதாசுக்கு 30 வெள்ளிக் காட்சிகள் கொடுத்து இயேசுவைச் சிறை செய்து சிலுவையில் அறைகிறார்கள். யூதாசும் ஒரு யூதன்தான். இயேசுவின் மறைவிற்குப் பிறகு அவரது கருத்துக்களை பால் என்பவர் பரப்புகிறார். அதன் மூலம் கிறிஸ்துவ மதம் தோன்றுகிறது. கிறிஸ்துவ மதத்திற்கு முதன் முதலில் மதமாறியவர்களில் யூதர்களே அதிகம்.
பின் பல ஆண்டுகளுக்கு பிறகு முகமது நபி தன்னை ஒரு தேவதூதனாக உணர்ந்து இஸ்லாம் மதம் உருவாகக் காரணமாக இருக்கிறார். அவரது காலகட்டத்தில் யூதர்கள் மிகவும் அடிமைப்பட்டு கிடந்தனர். ஆனால் நபி அவர்களை கண்ணியத்துடன்தான் நடத்தினார்.
கிறிஸ்தவர்கள் தங்கள் இயேசு கிறிஸ்து பிறந்த ஜெருசலேம் நகரத்தைக் கைப்பற்ற சிலுவைப் போரை ஆரம்பிக்கிறார்கள். அப்பொழுது ஜெருசலேம் முஸ்லிம்கள் வசம் இருந்தது. 150 ஆண்டுகள் நடந்த இந்தப் போரில் அதிகம் கொல்லப்பட்டவர்கள் யார் என்றால் அது யூதர்கள்தான்.
யூதர்கள் தங்களைக் காப்பாற்ற ஒரு தேவதூதன் எப்பொழுதும் வருவான் என்று காத்துக் கொண்டிருப்பார்கள். அதனைப் பயன்படுத்தி இஹ்வி என்ற ஒருவன், தான் கடவுளால் அனுப்பப்பட்ட தேவதூதன் என்று கூறி யூதர்களைப் பல ஆண்டுகள் ஏமாற்றி வந்திருக்கிறான். பின் சிறையில் அடைக்கப்பட்டான்.
மூன்றாம் பாகம் இருபதாம் நூற்றாண்டு. முதலாம் உலகப் போர் சமயத்தில் உலகம் முழுவதும் பரவியிருந்த யூதர்கள் அந்தந்த நாட்டின் சார்பிலேயே போரிட்டனர். எதிர்த்து சண்டையிடுவது தன் இனமக்கள் என்றாலும்கூட வென்ற ஒரு நாட்டில் வாழும் யூதர்கள் சந்தோசமாக இருப்பார்கள் அல்லவா என்று தொடர்ந்து போரிட்டனர். முதல் உலகப்போர் முடிந்து எல்லாம் அமைதியாக இருக்கலாம் என்ற சமயத்தில்தான் ஜெர்மனிக்கு அந்தச் சர்வாதிகாரி ஆட்சிக்கு வருகிறார். உலகில் ஆரியர்கள் மட்டுமே உயர்ந்த இனம் என்ற கொள்கை கொண்டிருந்த அவர், மற்ற இனம் அனைத்தையும் அழிக்க வேண்டும் என்று கூறி தன் நாட்டு மக்களை உசுப்பேத்தினார். இதில் பலிகடாவாக ஆக்கப்பட்டது யூத இனம்தான். ஜெர்மனியர்கள் தன் வாழ்நாளில் ஒரு யூதனையாவது கொன்றிருக்க வேண்டும் என்று எண்ணும் அளவிற்கு அவர்கள் மனதில் நஞ்சை விதைத்திருந்தான் அவன். அதன் எதிரொளிப்புதான் இரண்டாம் உலகப் போரில் நாம் கண்டது.
இரண்டாம் உலகப்போர் முடிந்து இஸ்ரேல் பாலஸ்தீன் என்று தனித்தனியாக நாடுகள் பிரிக்கப்படுகின்றன. அன்று தொடங்கி இன்று வரை நடந்துகொண்டிருக்கிறது இஸ்ரேல் பாலஸ்தீன் இடையேயான நிலப்பிரச்சினையும் இனப் பிரச்சனையும்.
நான்காம் பாகம் வாழ்க்கை-கலாச்சாரம். இதில் முழுக்க முழுக்க யூதர்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றியும் அவர்களின் கடவுள் சம்பந்தப்பட்ட கலாச்சாரங்கள், திருமணங்கள் பற்றியும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
யூதர்கள் ஏன் கிறிஸ்தவர்களுடனோ அல்லது முஸ்லிம்களுடனோ இணைந்து வாழ முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் தாங்கள்தான் இந்த உலகத்தில் உயர்ந்தவர்கள் என்ற நினைப்புதான். தாங்கள் கடவுளின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பவர்கள், தங்களின் கலாச்சாரம் மட்டுமே உயர்ந்தது என்ற எண்ணங்கள் அவர்களின் மனதில் ஊறிப் போய்க் கிடந்தன. ஒரு நாட்டில் ஒரு யூதன் முக்கியப் பதவி வகித்தால் அவன் தனக்குக் கீழ் தன் இன யூதனைதான் சிபாரிசு செய்வான். யூதர்களின் சிந்தனைகள் எப்பொழுதும் தங்கள் இனத்தின் நன்மைக்காகவே இருக்கும். எப்பொழுதும் தங்களைத் தனியாகவே அடையாளப்படுத்திக் கொண்டனர்.
இஸ்ரேல் பாலஸ்தீன் போரை பற்றி அறிந்துகொள்ள நினைப்பவர்கள் நிச்சயமாக இந்தப் புத்தகத்தை படிக்கலாம். அத்துடன் யூதர்களின் வரலாறும் மிக விரிவாக எழுதப்பட்டுள்ளது. வழக்கம்போல் முகில் அவர்கள் தன் அசாத்திய எழுத்து நடையால் நம்மை பக்கங்களை வேகவேகமாகத் திருப்ப வைக்கிறார். அனைவரும் வாசிக்கலாம்.
யூதர்கள்
முகில்
நூலைப் பெற: Amazon | FlipKart | Dial for Books