பங்குச்சந்தை: எதை வாங்குவது, எதை விற்பது?

Blogs / Reviews / பங்குச்சந்தை: எதை வாங்குவது, எதை விற்பது?

விமர்சனம்: பவண் குமார்

இந்த நூலின் ஆசிரியர் சோம. வள்ளியப்பன் அவர்கள் பொருளாதாரத் துறையில் நிபுணர். அவரின் அள்ள அள்ளப் பணம் சீரிஸ் மிகப் பிரபலமான நூல். இந்தத் தொகுதியின் முதல் பாகமான பங்குச்சந்தை அடிப்படைகளை நான் ஆண்டுவிழா போட்டியில் இதே துறைசார்ந்த நூல்கள் தலைப்புக்கு வாசித்தேன். தொகுதியின் அடுத்த நூலான பங்குச்சந்தை அனாலிசிஸ்ஸை இந்த வருடம் வாசித்திருக்கிறேன்.

சோம. வள்ளியப்பன் அவர்களின் எழுத்தில் இருக்கும் ஒரு அற்புதம், எத்தனை கடினமான கோட்பாட்டையும் சாதாரண மனிதனுக்கு புரியும் விதம் எழுதுவதுதான். அதனால்தான் மிக நுட்பமான பங்குச்சந்தை குறித்த இவரின் புத்தகங்கள் பெரும்பான்மை மக்களால் வாசிக்கப்படுகிறது.

இந்த நூல் 2010-2011 காலகட்டத்தில் எழுதப்பட்டது. அதனால் இந்த நூலில் இருக்கும் சில புள்ளிவிவரங்கள் இன்றைய தேதிக்குக் காலாவதியானவையாக இருக்கிறது. ஆனால் இந்த நூலின் மைய நோக்கமான பங்குச்சந்தையை எப்படிப் பகுப்பாய்வு செய்வது? அதற்கான சூத்திரங்கள் எல்லாம் எந்தக் காலத்துக்கும் பொருந்த கூடியவைதான். அதனால் பங்குச்சந்தை பற்றி ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயம் இந்த நூலை வாசிக்க வேண்டும்.

இந்த நூலை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதல் பகுதி முழுவதும் பொருளாதார அடிப்படைகள். இந்திய நாட்டின் பொருளாதாரத்தை முடிவு செய்யும் பல காரணிகள் பற்றி மிக விரிவாகக் கூறியுள்ளார். ஏன் இந்திய பொருளாதாரம் இங்கே முக்கியம் என்றால் பங்குச்சந்தை என்பது ஒரு நாட்டின் பொருளாதாரம் சார்ந்தே இயங்கக்கூடியது. பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் நிச்சயம் இந்தப் பொருளாதார அடிப்படைகளைத் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

அதேபோல, ஒரு நாட்டின் பொருளாதார நிலைமையைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் பல அளவுகோல்கள் உண்டு. அவற்றில் முக்கியமான சிலவற்றைத் தினசரிகள் படிப்பவர்கள், செய்திகளை ஊடகங்கள் மூலம் கேட்பவர்களுக்குத் தெரியும். அவை,

* ஐ.ஐ.பி. (IIP – இண்டெக்ஸ் பார் இண்டஸ்டியில் புரெடெக்ஷன்).
* ஜி.டி.பி. (GDP – நாட்டின் மொத்த உற்பத்தி).
* பிஸ்க்கல் டெபிசிட் (Fiscal Deficit – அரசின் நிதிப் பற்றாக்குறை).
* இன்ஃபிளேஷன் (Inflation – பணவீக்கம்).
* பேலன்ஸ் ஆஃப் டிரேட் (Balance of Trade – ஏற்றுமதி – இறக்குமதி வித்தியாசம்).
இவற்றைப் பற்றியெல்லாம் விரிவாக இந்த தலைப்பில் பேசியுள்ளார்.

அடுத்ததாக இந்த நூலில் நல்ல பங்குகளைக் கண்டுபிடிப்பது எப்படி என்று கூறியுள்ளார். இந்தத் தலைப்பில்தான் நிறைய விதிகள் பற்றி, நுணுக்கங்கள் பற்றி கூறி இருக்கிறார்.

பங்குகளின் விலை எப்போது உயரும்? அதை எப்படிக் கண்டுபிடிப்பது?

பங்குச்சந்தையின் குறியீட்டு எண்களான சென்செக்ஸும் நிஃப்டியும் தொடர்ந்து உயர்கின்றன என்றால், பெரும்பாலான பங்குகளின் விலைகள் உயர்கின்றன என்று பொருள் (முடிவு 1).

அதற்குக் காரணம், இந்திய நிறுவனங்களின் பங்குகளுக்குப் பொதுவாக நல்ல கிராக்கி இருக்கிறது. உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய நிறுவனப் பங்குகளை வாங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் (முடிவு 2).

இந்திய நிறுவனங்கள் தற்போது மிக நன்றாக வியாபாரம் செய்து நல்ல லாபம் ஈட்டுகின்றன. அவை ஈட்டும் லாபங்கள் தொடர்ந்து அதிகரிக்கின்றன (முடிவு 3).

அப்படிப் பெரும்பாலான நிறுவனங்களின் லாபம் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம், தேசத்தில் பொருளாதாரச் சூழ்நிலைகள் சாதகமாக அமைந்திருக்கின்றன (முடிவு 4).

எந்ததெந்தப் பங்குகளை வாங்க வேண்டும் என்பதை அறிய 2 வழிமுறைகள் கூறுகிறார்,
1. Fundamental அனாலிசிஸ்
2. Technical அனாலிசிஸ்

1. Fundamental அனாலிசிஸ்:
பொருளாதாரத்தைக் கொண்டும், அந்தந்தப் பங்கு நிறுவங்களின் செயல்பாடு, லாபம்/நஷ்டம், கொள்கை முடிவுகள் இவற்றைக் கொண்டு செய்யப்படுவது.

2. Technical அனாலிசிஸ்:
கடந்த கால விவரங்களைக் கொண்டு பல்வேறு சூத்திரங்கள் மூலம் ஒரு முடிவுக்கு வருவது டெக்னிக்கல் அனாலிசிஸ்.

ஒரு பங்கை அது லாபம் தருமா இல்லையா என்பதை அறிய இந்த இரண்டு அனாலிசிஸ்யும் செய்ய வேண்டும்.

சுருக்கமாகச் சொல்வதானால், எதை வாங்க வேண்டும், விற்க வேண்டும் என்பதற்கு ஃபண்டமெண்டல் அனாலிசிஸ். எப்பொழுது வாங்கவோ அல்லது விற்கவோ வேண்டும் என்பதைச் சொல்வது டெக்னிக்கல் அனாலிசிஸ்.

மார்க்கெட் ட்ரெண்ட் என்று ஒன்று உண்டு. மொத்த பங்குச்சந்தைக்கும் இது பொருந்தும். டிரெண்ட் எனும் போக்கு மேல்நோக்கியோ, கீழ்நோக்கியோதான் இருக்கும். ஆனால் அந்த டிரெண்டிலும் உள்ளே சின்ன ஏற்ற இறக்கங்கள், அதனால்தான் நெளிவுகள். இவற்றைக் கொஞ்சம் தட்டிவிட்டு, நெளிவுகள் நீக்கிப் பார்க்க உதவுவது சராசரியின் முக்கிய வேலை. இந்த சராசரிகளை மூன்று வகைகளாகப் பிரிக்கிறார்கள்.

a) சிம்பிள் மூவிங் ஆவரேஜ் (Simple Moving Average)
b) எக்ஸ்பொனென்ஷியல் மூவிங் ஆவரேஜ் (Exponential Moving Average)
c) வெயிட்டட் மூவிங் ஆவரேஜ் (Weighted Moving Average)

எப்பொழுது ஆவரேஜ் லைனை கீழிருந்து பிரைஸ் லைன் வெட்டுகிறதோ அப்பொழுது அந்தப் பங்கை வாங்கலாம் (Buy) என்கிறார்கள். அந்தப் பங்கு நிச்சயமாக விலையேறுகிறது என்பதை இது ஊர்ஜிதப்படுத்துகிறது.

அதேபோல, எப்பொழுது அந்தப் பங்கின் பிரைஸ் லைன், அதன் ஆவரேஜ் லைனை மேலிருந்து வெட்டுகிறதோ அப்பொழுது (மே 2006) டிரெண்ட் மாறுகிறது என்று பொருள். அந்தச் சமயத்தில் விற்றுவிடலாம் (Sell).

நம் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்? பங்குச்சந்தையில் வாய்ப்பு, அபாயம் இரண்டும் இருக்கிறது. எப்பொழுதும் இருக்கிறது. இப்படிப்பட்ட சந்தையில் நம் அணுகுமுறை எப்படியிருக்க வேண்டும்?

1. பங்குச்சந்தையிலும் நாம் முதலீடு செய்யலாம். அதாவது… பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம். ஆனால் அதில் மட்டுமே செய்ய வேண்டாம். நம்மால் முதலீடு செய்யக்கூடிய ஒரு பகுதி பணத்தினை மட்டும் இங்கே கொண்டு வரவேண்டும். எவ்வளவு நிச்சயமாக வாய்ப்பு இருப்பது தெரிந்தாலும் சரி. அந்தக் கட்டுப்பாடு மோசமான நஷ்டங்களில் இருந்து நம்மைக் காப்பாற்றும். கொஞ்சம் அசையாச் சொத்து, கொஞ்சம் தங்கம், கொஞ்சம் இன்ஷூரன்ஸ், கொஞ்சம் வங்கிகளில் வைப்புகளாக, உடனடியாகத் தேவைப்படுமானால் எடுக்கக்கூடிய வகையில் வைத்துக்கொள்ள வேண்டும். மீதமுள்ள பணத்தினைத்தான் பங்குச்சந்தையில் போடவேண்டும்.

2. குறைந்த பட்சம் மூன்று நான்கு வருடங்களுக்கு விட்டு வைக்கக் கூடிய அளவு பணத்தினை மட்டுமே பங்குச்சந்தையில் முதலீடு செய்வது என்ற தீர்மானத்துடன் பங்குச்சந்தையில் இறங்க வேண்டும்.

3. நல்ல நிறுவனப் பங்குகளில் மட்டும், அதாவது ஃபண்டமென்டல் உறுதியாக உள்ள ஷேர்களில் முதலீடு செய்ய வேண்டும். ஏதும் எதிர்பாராத பிரச்னைகள் வந்து பங்குச்சந்தை இறங்கினாலும், கையில் இருக்கும் பங்குகளை வைத்துக்கொண்டு அப்பொழுதுதான் காத்திருக்க முடியும்.

4. நாம் டிரேடிங் செய்பவராக இருந்தால், நமக்கு வரக்கூடிய லாபம் (அது 20 சதவிகிதமோ கொஞ்சம் கூடுதலாகவோ இருக்கலாம்) கிடைத்ததும், முறையாக வெளியே வந்துவிட வேண்டும் (Booking Profit).

5. டிரேடிங் செய்வதில் நஷ்டங்களை உடனடியாகத் தடுக்கக்கூடிய ஸ்டாப் லாஸ் (Stop Loss) ‘டிரிக்கர்’களைத் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

6. நிறைய விவரங்கள் தெரிந்து கொண்டு, சிந்தித்து, பங்குகள் வாங்குவது, விற்பது. இம்பல்சிவ் ஆகச் செய்வது இல்லை என்கிற கட்டுப்பாடு வைத்துக்கொள்ள வேண்டும்.

7. சந்தைச் செய்திகளில், மனோபாவங்களில் மயங்கி விடாமல் தொடர்ந்து நம்மைக் கவனப்படுத்திக் கொள்வது; ஒரேயடியாக ஏறுவதும் ஒரேயடியாக இறங்குவதும் சாத்தியமில்லை என்பதை நினைவில் நிறுத்திக் கொள்வது. இவை இரண்டையும் மறக்கக் கூடாது.

8. டெக்னிக்கல் அனாலிஸ்களைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப, சரியான சமயங்களில் பங்குகளை வாங்க வேண்டும்; விற்க வேண்டும்.

9. எந்த நேரத்திலும் சரியில்லாத நிறுவனங்களின் பங்குகளை வாங்கவே கூடாது.

பங்குச்சந்தை ஏறும், இறங்கும். இரண்டுமே நிலையில்லை. எப்பொழுதிலிருந்து எவ்வளவு காலத்துக்கு ஏறும், இறங்கும்? நிச்சயமாக சொல்லவே முடியாது. அப்படிப்பட்ட பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்க, அதனுடன் இணைந்து சில வருடங்களாவது வாழ்வதுதான் உதவும்.

நல்ல நிறுவனங்கள் எப்பொழுதும் சரியாகவே நடக்கும், செயல்படும். பகிர்ந்தளிக்கும் நிறுவனங்களின் பங்குகள் நீண்டகாலப் போக்கில் ஆபத்தற்றவை. அப்படி, வைரங்களாகப் பொறுக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தியா அடுத்த 20, 30 ஆண்டுகளில் பெரும் வளர்ச்சி காண இருக்கிறது. அதில் நமது நிறுவனங்களின் (Corporates) பங்கு அளப்பரியது. அந்த நிறுவனம் பங்குகளை வாங்குவதன் மூலம் அந்த வளர்ச்சியில் நாமும் பங்கு பெறலாம். அநாவசியமான பயமோ, அளவற்ற ஆசையோ வேண்டாம். நிதானம் கட்டுப்பாடான அணுகுமுறை இவை போதும் நன்கு சம்பாதிப்பதற்கு.

அள்ள அள்ளப் பணம் – 2: பங்குச்சந்தை அனாலிசிஸ்
சோம. வள்ளியப்பன்

நூலைப் பெற: Amazon | Flipkart | Dial for Books

விமர்சனம்: பவண் குமார் இந்த நூலின் ஆசிரியர் சோம. வள்ளியப்பன் அவர்கள் பொருளாதாரத் துறையில் நிபுணர். அவரின் அள்ள அள்ளப் பணம் சீரிஸ் மிகப் பிரபலமான நூல். […]

Scroll to Top