விமர்சனம்: R.சேதுராமன்
கொள்கைகளும் கோட்பாடுகளும் நாட்டிற்கு நாடு வேறுபடும். நாட்டிற்குள்ளேயே வேறுபாடு தோன்றினால் வேறு நாடே தோன்றிவிடும். சுதந்திரம் பெறுவதற்கு முன் இந்தியா சந்தித்த சிக்கல் பலவற்றில் பெரும் சிக்கல் இந்தியப் பிரிவினை தான். நாட்டின் இந்து முஸ்லீம் மக்கள் ஒற்றுமையில் பிளவு ஏற்பட்டு தனிநாடு கோரிக்கை வலுப்பெற்றது.
இந்தியாவில் முஸ்லீம்கள் சிறுபாண்மை மக்களாக இருப்பதைவிட தனி பாகிஸ்தான் அமைவதே மேல் என்ற முகமது அலி ஜின்னா வின் கோரிக்கை வலுவாக இருந்தது. என் இறந்த உடல் மீது தான் இந்தியப் பிரிவினை நடக்கும் என்ற காந்திஜீயால் இந்தப் பிரிவினையைத் தடுக்க முடியவில்லை. நேரு, படேல், மவுண்ட் பேட்டன் போன்றோர் பேசிப்பார்த்தும் சமாதானம் அடையவில்லை ஜின்னா.
முஸ்லிம் மக்களால் ஜனநாயக நாட்டில் இருக்க முடியாது. இந்துக்களின் வழிபாடு, கலாச்சாரம், உணவு முறை என்பது வேறு, முஸ்லீம்கள் பழக்க வழக்கங்கள் வேறு. இருவரும் ஒன்றி வாழ்ந்தால் அதில் பல்வேறு சச்சரவுகள் ஏற்படும். இதனால் மதப்பிரச்சினைகள் தலைதூக்கும். எனவே கண்டிப்பாகத் தனி நாடு வேண்டும் என்று உறுதியாக இருந்தார் ஜின்னா.
வேறு வழியின்றி பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கை ஏற்கப்பட்டு எல்லைகள் பிரிக்கப்பட்டன. தங்கம் உட்பட உலோகங்கள் முதல் பேனா பென்சில் வரை பங்கு பிரிக்கப்பட்டது. இறுதியில் இந்தியாவில் இருந்த முஸ்லீம் மக்கள் சிந்தித்த விதம் வேறு மாதிரியாக இருந்தது. இந்தியாவில் இருந்தாலும் சிறுபான்மைதான். பாகிஸ்தான் போனாலும் அங்கே ஷியா, சன்னி பிரிவு பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. மேலும் இந்தியாவை விட்டு வெளியேற விரும்பாத காரணமும் உண்டு. ஆகவே இந்தியாவில் இந்தியராக இருப்பதே விருப்பம் எனப் பலர் தங்கிவிட்டனர்.
பிரிவினையின் போது உடன்படிக்கை கையெழுத்தானது. அதில் இந்திய பாகிஸ்தான் எல்லைகள் பிரிக்கப்பட்டன. எல்லாம் முடிந்தாலும் கூடவே கலவரமும் வெடித்தது. சிந்து பகுதி முழுவதும் பாகிஸ்தான் நாட்டிற்கு சென்றதால் அங்கிருந்த இந்துக்கள் விரட்டியடிக்கப்பட்டனர். இந்தியாவில் இருந்த பஞ்சாப் பகுதியில் முஸ்லிம்கள் பாகிஸ்தான் விரட்டி அடிக்கப்பட்டனர். இதில் கொலையும் கொள்ளையும் அரங்கேறி இரு நாடும் கலவர பூமியானது.
இந்தியாவில் இந்து மத அமைப்பும் பாகிஸ்தானில் இஸ்லாமிய மத அமைப்பும் வெறியாட்டம் ஆடின. இவர் அவரை குறை கூறுவதும், அவர் இவரை குறை கூறுவதும், அவர் இவருக்கு துணை நிற்பதும், இவர் அவருக்கு துணை நிற்பதுமாக சுதந்திரம் பெரிய கலவரத்தோடு தொடங்கியது. இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய மக்கள் இங்கிருந்து கொண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படகூடாது என்று வலியுறுத்தி கூறப்பட்டது. பாகிஸ்தான் தனக்கு காஷ்மீர் வேண்டும் என பிடிவாதமாக நின்றது.
சுதந்திரம் பெற்ற பிறகு காஷ்மீரைப் பிடிக்க பாகிஸ்தான் திட்டமிட்டது. இந்தத் தவறால் பாகிஸ்தானுக்குச் செலுத்த வேண்டிய பிரிவினை தொகை பாக்கியை இந்தியா தரக்கூடாது என்று கருத்து வலுப்பெற்றது. உடன்படிக்கை மீறி பாகிஸ்தான் செயல்பட்டதால் பணம் தந்து அவர்களைப் போருக்கு ஊக்குவிப்பதுபோல் தவறு செய்ய வேண்டாம் என்ற கருத்து ஏற்பட்டது.
காஷ்மீர் அரசரிடம் பேசி இந்தியாவுடன்இணைந்திருப்பதே பாதுகாப்பானது என்று முடிவு எட்டப்பட்டது. ஆயினும் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. இந்தியப் பிரிவினை காரணமாக நடந்த வன்முறையில் ஏராளமான இந்து முஸ்லீம் மக்கள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானிலிருந்து வந்த ரயில் வண்டிகளில் இந்துக்களின் பிணம் மட்டுமே வந்து சேர்ந்தது. இந்தியாவில் முஸ்லீம்கள் உயிரோடு கொளுத்தப்பட்டனர். தனி நாடு வாங்கியபிறகு பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக மாறியதால் அங்கே இஸ்லாம் பிரதிநிதித்துவம் பெற்றது. ஆனால் இந்தியா மட்டும் மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டுமா என்று இந்து அமைப்புகள் கலவரம் செய்தன. காந்தி சுடப்பட்டார். இந்தியா ஸ்தம்பித்து நின்றது. அதற்கேற்றாற்போல் பாகிஸ்தான் இந்துக்கள் அல்லல் பட்டு கட்டாய மதமாற்றம் அல்லது நாடு விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இதனால் இந்திய முஸ்லிம்கள் எதற்கு இந்தியாவில் இருக்க வேண்டும். அவர்களுக்கு பிரித்து கொடுத்த நாட்டிற்கே செல்லட்டும் என பிரச்சினை வெடித்தது. ஒரே வாதம் தான் கலவரங்கள் ரத்த ஆறாக ஓடியது. கையறு நிலையில் இருந்த இந்திய அரசாங்கம் சுதாரித்து பிரச்சினையை தீர்க்க நினைத்தது.
இந்திய பிரிவினை பல்வேறு காரணங்களால் ஏற்பட்டாலும் முதல் முக்கிய காரணம் மதம்தான். மதத்தால் ஏற்பட்ட பிரிவினையும், மதத்தை வைத்து நடந்த சம்பவங்களும் பல்வேறு நினைவுகளாக இந்த புத்தகம் கூறுகிறது.
இந்தியப் பிரிவினை
மருதன்
நூலைப் பெற: Amazon | Flipkart | Dial for Books